Monday, March 31, 2008

அப்படியா,ரொம்ப நன்றி தம்பி.............!

வழக்கம்போல் அந்த டவுன் பஸ்ஸில் இன்றும் கூட்டம் நிரம்பிவழிந்தது,ஆனாலும் அருண் ஜன்னலோர இருக்கையை பிடிச்சு உட்கார்ந்துட்டான்.


பஸ் புறநகர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோதே அவனால் உட்காரமுடியவில்லை,இன்னும் இருபத்தைந்து கிலோ மீட்டர் போகணும்னு நெனச்சாலே எரிச்சலாக வந்தது.சைக்கிளில் போறவங்க கூட சைடு வாங்கி போற அளவுக்குதான் இருந்தது பஸ்ஸின் வேகம்.இந்த வேகத்திலேயே போயிட்டிருந்தா இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் ஊர் போய்ச்சேர.இதுல அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு நிறுத்தம் வேற.


கோடைகாலம்கிறதால ஒரே புழுக்கம்,அநேக பயணிகள் வேர்வையில் தெப்பமாக நனைந்திருந்தனர். மேற்கொண்டு கூட்டம் கூடிக்கொண்டே இருக்குதேத் தவிர, ஒருத்தரும் இறங்குற மாதிரி தெரியல.


அருண் அமர்ந்திருந்த இருக்கை, சரியாக டயருக்கு மேலாக வரும் இருக்கையாதலால் அவனால் வசதியாக உட்காரமுடியவில்லை,எழுந்து நிற்கலாமென்றால்,"கூட்டத்தில் நசுங்குவதைவிட, இதே மேல்" என்றெண்ணி அப்படியே உட்கார்ந்து பார்வையை வெளியே ஓடவிட்டான்.அதிலும் சிரமம் ,அவன் உயரத்திற்கும்,ஜன்னலின் உயரத்திற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. ரூட் பஸ்ஸில் வந்திருந்தாலாவது பாட்டு கேட்டுகிட்டே வந்திருக்கலாம், இப்போ அதுக்கும் வழி இல்லையென்று நினைத்துக் கொண்டான்.


"டிக்கெட்,டிக்கெட்"என்றபடி நடத்துனர் கூட்டத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தார்.அவரைப் பார்த்த போது, இவனோட சிரமம் கொஞ்சம் பரவாயில்லேன்னு தோணுச்சு.


இருக்கையின் உஷ்ணம் தாங்காமல் லேசாக எழுந்து மீண்டும் அமர்ந்து கொண்டான்,அதற்குள் அவன் எழப்போவதாக எண்ணிய இருவர், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு இடம் பிடிக்க எத்தணித்து அசடு வழிந்தனர்.


பக்கத்தில உட்கார்ந்திருந்தவர் ஒரு பிரபல வார இதழை படித்துக் கொண்டிருந்தார், மெதுவாக அதில் கவனத்தை செலுத்தினான். தனக்குப் பிடித்த நடிகரின் பேட்டி அதில் வெளியாகியிருந்தது,ரொம்ப சுவராஸ்யமாக படிக்க ஆரம்பித்தான்,ஒரு ரெண்டு பத்தி படிக்கிறதுக்குள்ள அவர் அடுத்த பக்கத்துக்கு திருப்பிவிட்டார்.அந்த நடிகரையும்,பிரபல நடிகையையும் இணைத்து வெளிவரும் கிசு கிசு பற்றிய கேள்விக்கு, அவர் சொல்லியிருந்த பதிலை படிக்கும் போதுதானா இப்படி திருப்ப வேண்டும்.


இப்போ அவனுக்கு, பஸ்ஸின் வேகம்,வேர்வை,இருக்கையின் சிரமம் எதுவுமே சிந்தனையில் இல்லை,யோசனை முழுக்க அந்த நடிகரின் பதில் என்னவாக இருக்கும் என்பதிலேயே இருந்தது.


அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட அதிலும் சினிமா சம்பந்தமான செய்திகளே இருக்க,அவர் அருணிடம்,"எந்த புத்தகத்த பார்த்தாலும் இந்த சினிமாக்காரணுங்கள பத்திதான் எழுதுறானுங்க" என்றதற்கு மெலிதாக சிரித்து வைத்தான்.மனசுக்குள் "சீக்கிரம் படிச்சு முடிய்யா" என்று சொல்லிக்கோண்டான்.


அடுத்தடுத்து சில அரசியல் செய்திகளை பார்த்துக் கொண்டு வந்தார், இவனும் ஓரக்கண்ணாலேயே வேகமாக படித்துக்கொண்டிருந்தான்.சில பக்கங்களை அவர் படிக்கும் வேகம் இவனோட பொறுமையை சோதிக்கிற மாதிரி இருந்தது.


பஸ் இப்போ கிட்டதட்ட பாதி தூரம் கடந்திருந்தது,கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பித்திருந்தது.இன்னும் ஒரு சில நிறுத்தம்தான் மீதம்.அதை நினைத்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.


அருண் எப்போவோ படிச்சு முடிச்ச பக்கத்தை, இப்போதான் அவர் படிச்சு முடிச்சு அடுத்த பக்கத்தை புரட்டினார், மீண்டும் ஜோதியில் ஐக்கியமாகி படிக்க ஆரம்பித்தான். புதிதாய் கட்சி ஆரம்பித்திருக்கிற ஒரு நடிகரின் பேட்டி அடுத்ததாக இருந்தது.


"இனிமேல் நடிகரெல்லாம் கட்சி ஆரம்பிக்கக் கூடாதுன்னு சட்டம் கொண்டுவரணும்" என்று ரொம்பவே ஆவேசமா அருணைப் பார்த்து சொன்னார்.


இவனும் கண்ணை புத்தகத்தில் பதித்துக் கொண்டே,"ஆமாம்" என்பதாய் தலையாட்டினான்.


அருகில் நின்று கொண்டிருந்த ஒருத்தரும், நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறதுக்கு எதிரா பேச ஆரம்பித்தார்,உடனே அருணிண் பக்கத்து இருக்கைகாரரும், படித்துக் கொண்டிருந்த பக்கத்தில் அடையாளத்திற்கு விரலை வைத்துக்கொண்டு, புத்தகத்தை மூடிய படியே சுவராஸ்யமா அவருடன் பேச ஆரம்பித்துவிட்டார்.


அதற்குள் இந்த விஷயத்துக்கு ஆதரவாகவும்,எதிராகவும் வாக்குவாதம் மிக சூடாக இன்னும் சிலரால் தொடரப்பட்டது.பேச்சின் இடையே புத்தகத்தை திறப்பதுபோல் வருவார், மீண்டும் பேச்சிலேயே மூழ்கிவிடுவார். இவனுக்கோ சரியான எரிச்சலாக இருந்தது.


"யோவ்,ஒன்னு படி , இல்ல பேசு" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.


அடுத்த நிறுத்தத்தில் அருண் இறங்க வேண்டும்,அதற்கு தயாராகி கொண்டிருந்தபொழுது மீண்டும் வாசிக்க தொடங்கினார்,இவனும் நிறுத்தம் வருகிறதாவென பார்த்துக் கொண்டே விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான்.அதற்குள் நிறுத்தம் மிக நெருங்கிவிட எழுந்துகொண்டான்.


"என்ன தம்பி இறங்க போறீங்களா?"என்றார் பக்கத்து இருக்கைக்காரர்.


"ஆமாம்"என்றான்.


"அப்படியா,ரொம்ப நன்றி தம்பி" என்றபடியே அருண் இடம் பிடிக்க போட்டுவைத்திருந்த, அந்த வார இதழை அவனிடம் கொடுத்தார்.


தன் நேரத்தை நொந்தபடியே புத்தகத்தை வாங்கிக்கொண்டு இறங்கினான் அருண்.

Friday, March 14, 2008

சொப்பன சங்கமம்...!

பூவாச கூந்தலின் கிறக்கத்தில்
விழித்துக்கொண்ட ஆண்மை,
உச்சிமுகர்ந்து காதுமடல் வருடி,
உதிரமதிர அதரங்கள் சுவைத்து,
சில வளைவு நெளிவுகள் கடந்து
எல்லாம் முடித்(ந்)து களைத்து,
உறங்கி விழிக்கையில்,
எஞ்சியிருக்கும் கலவிச் சோம்பல்
மெல்ல விளங்கவைக்கும்
நேற்றிரவின் சொப்பன சங்கமத்தை,
அனைத்தும் புரிந்த கணத்தில்
அங்கதமாய் கைக்கொட்டிச் சிரிக்கும்
வேறுவழியில்லாத பிரம்மச்சரியம்!!!

Tuesday, March 11, 2008

பள்ளித் தோழியே....!

பத்து வருடம் கழித்து என் பள்ளித் தோழிகள் சிலரை காண நேர்ந்த போது தோன்றிய சிந்தனைகள்.சும்மா நாமும்தான் மொக்கை போட்டு
பார்க்கலாமேன்னு.....

பதின்ம வயதின்
பருவ செழிப்பில்;
பார்த்து ரசித்த
பள்ளித் தோழி
நினைவில் பசுமையாய்
எதிரில் பருமனாய்..!
****************************
பாலின வேறுபாடின்றி
பழகிய தோழியொருத்தி,
பார்த்த நொடியில்
பதறி குனிகிறாள்,
"பதி" அருகிருக்கையில்...!
****************************
வெட்கமென்றால் என்ன?
எனக் கேட்ட
இன்னொருத் தோழி,
பார்த்த மாத்திரத்தில்
வெட்கப்பட்டாள்,
தன் இரட்டை குழந்தையோடு
சென்றுகொண்டிருக்கையில்..!
*********************************
பள்ளித் தோழர்களின் நட்பு
அப்படியே இருக்க,
தோழிகளின் நட்போ
நினைவில் ஏதேதோவாய்
எதிரிலே எதுவுமில்லாததாய்..!

இது காதல் காலமடி...! (பகுதி:4)

நீ
சிலை,

உன்னைப்
பார்த்த கணத்தில்

நானும்..!

எப்போதும் நிழலாய்
தொடர்வதைவிட;
உனக்குள்ளாகவே விழும்
நண்பகல் நிழலாக மட்டும்
நானிருக்க வேண்டும்..!

நித்தமும்
சுத்தம் செய்யப்படும் வீட்டினில்
படிந்துகொண்டே இருக்கும்
தூசியைப் போல,
வேண்டாமென நினைத்தாலும்;
வெகு இயல்பாய்
வந்தமரும் உன் ஞாபகம்..!

என் கவிதைகளின் முடிவில்
இனி ஆச்சர்யக்குறிக்கு பதிலாக
உன் பெயர்கொண்டு
முடிக்க உத்தேசம்,
எப்போதுமே நீ,
ஆச்சர்யமாய் தெரிவதால்..!

வேறுபட்ட ரசனையுடைய நாம்,
பழகிய சில நாட்களில்,
பிடித்த கவிதையின் சாயல்
என்னையுமறியாமல்
எனது கவிதையில் நுழைவது போல,
உனக்காண ரசனையில்
சிந்திக்க தொடங்கிய கணத்தில்
எனக்குள் நீ வந்திருந்தாய்..!

Monday, March 10, 2008

இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள்:

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான அனேக பாடல்கள் குறிப்பாக எண்பதுகளில் அவரது இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை மதிமயங்க வைத்தவை.
என்னுடைய தெரிவுகளாக நான் இங்கே கொடுத்திருக்கும் பாடல்கள் ஒருசில பாடல்களைத் தவிர அனைத்துமே 90 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களே.இவை அனைத்துமே அதிராத இசையில் காதல் ரசம் சொட்டும் இனிமையான வரிகளை கொண்ட மெலடிகள்.இரவு நேரத்தில் கேட்டு மகிழ உகந்த பாடல்கள்.அனைத்து பாடல்களுமே இருவர் இணைந்து(duet) பாடும் வகையில் இருக்கும்.

1.ஓ பட்டர் ஃபிளை -மீரா
http://youtube.com/watch?v=vRohhh7k5x0

2.கண்ணாலே காதல் கவிதை -ஆத்மா

http://youtube.com/watch?v=nyHAw42NzT4

3.மழை வருது மழை வருது குடை கொண்டு வா -ராஜா கைய வெச்சா

http://youtube.com/watch?v=GT2GFeN6Pos

4.காதல் கவிதைகள் படித்திடும் நேரம்- கோபுர வாசலிலே

http://youtube.com/watch?v=lR8BrvAOK-g

5.சொர்க்கத்தின் வாசற்படி- உன்னைச் சொல்லி குற்றமில்லை

http://youtube.com/watch?v=SDj6mbu1mr0

6.சுந்தரி கண்ணால் ஒரு சேதி -தளபதி

http://youtube.com/watch?v=H_6WG2r5maI

7.கல்யாணத் தேனிலா -மௌனம் சம்மதம்

http://youtube.com/watch?v=XKbSmts29Y0

8.உன்னை எதிர் பார்த்தேன்- வனஜா கிரிஜா
http://youtube.com/watch?v=g5MaB3ofgVQ

9.வா வா அன்பே அன்பே- அக்னி நட்சத்திரம்
http://youtube.com/watch?v=DEL6MdpqtOg

10.தூங்காத விழிகள் ரெண்டு -அக்னி நட்சத்திரம்
http://youtube.com/watch?v=UBZNVcvCtcU&feature=related

11.ஆகாய வெண்ணிலாவே -அரங்கேற்ற வேளை
http://youtube.com/watch?v=oGFKxduCbB0

12.நீ பாதி நான் பாதி கண்ணே- கேளடி கண்மணி

http://youtube.com/watch?v=UnUlNrIAp94&feature=related

மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த இதே மாதிரி பாடல்களான கீழே குறிப்பிட்ட பாடல்களும் அதிராத இசையிலேயே இருக்கும்.

13.ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்- இதய தாமரை
http://youtube.com/watch?v=FbZ84XheNLQ

14.சங்கீத ஸ்வரங்கள்- அழகன்

http://youtube.com/watch?v=vmCi2HVQXr0&feature=related

15.தோடி ராகம் பாடவா- மாநகரக் காவல்
http://youtube.com/watch?v=adTVia0vbtk

இந்த மாதிரி இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது.உங்களுக்கு தெரிந்த இதே மாதிரியான பாடல்கள் இருந்தால் சொல்லிட்டு போங்க.

Thursday, March 6, 2008

காதலாகவே சில கவிதைகள்!

அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!

நீ உண்ணும் போது மட்டுமாவது
உன்னை நினைக்காமலிருக்க
நினைக்கிறேன்,
உனக்கு புரையேறிவிடக்
கூடாதென்பதற்காக!

வான்வெளியைப் பற்றி
ஆராய்ச்சி செய்யுமளவுக்கு
ஞானமிருந்தாலும்,
நீ கேட்கும்,"நிலா பெரியதா?,
நட்சத்திரம் பெரியதா?"
என்பது போன்ற,
குழந்தைத்தனக்
கேள்விக்கெல்லாம்,
தெரியாதென்றே
சொல்லி வைப்பேன்,
"இது கூடத் தெரியாதா?" என்றுக் கூறி,
என்காதைப் பிடித்துத்
திருகுவாயே அதற்காகவே !

என் தங்கையோடு
நானிருந்த புகைப் படத்தை
நேற்று உன்னிடம் காட்டினாளாமே,
அதைக் காணோமென்று
இங்கே தேடிக் கொண்டிருக்கிறாள்
பைத்தியக்காரி!

மார்கழி அதிகாலை
நீ ஈரக்கூந்தலோடு,
கோலமிட்டுக் கொண்டிருக்கிறாய்,
உன் நெற்றியில் ஒதுங்கிய
கற்றைக் முடியில்,
வழிந்து வந்த
ஒற்றைத் துளி நீர்,
நான் காதலை சொல்ல,
தயங்கி நிற்பது போலவே,
கீழே விழலாமா?,வேண்டாமா?
எனத் தயங்கி நிற்கிறது!

Wednesday, March 5, 2008

மோகன்லால் திரைப் படங்கள் ஒரு பார்வை:

சந்தரமுகி படம் வெளிவருவதற்கு முன்பு அப்படத்தைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவந்துகொண்டிருந்தது,அப்படி வெளியான செய்திகளில் முக்கியமானது ,பாசில் இயக்கத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா ஆகியோரது நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான மணிச்சித்திரதாழு என்ற மலையாளப் படம்தான் தமிழில் சந்திரமுகியாகிறது என்பதாகும்.உடனே ஒரு ஆர்வக்கோளாறில் அந்தப் படத்தின் வி.சி.டி வாங்கிப் பார்த்தேன்.
அப்படத்தின் திரைக்கதை மற்றும் மோகன்லால்,ஷோபனாவின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு சிறைச்சாலை படம் பார்த்த பொழுதே மோகன்லாலின் நடிப்பின் மீது ஒரு மரியாதை இருந்தது.அது மணிச்சித்ரதாழ் பார்த்தபொழுது அவருடைய மற்ற படங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இப்படித்தான் எனக்கு மலையாளத் திரைபடங்களின் அறிமுகம் கிடைத்தது.
அந்த வகையில் எனக்குப் பிடித்த சில படங்கள் இங்கே:
தசரதம்:
இயக்கம்:சிபி மலயில்
நடிகர்கள்:மோகன்லால்,நெடுமுடி வேணு,முரளி,ரேகா
வெளிவந்த ஆண்டு:1989
இந்தப் படத்தில் ராஜிவ் மேனன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.கதைப்படி ராஜிவ் மேனன் ஒரு கோடீஸ்வரன்,சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து , மேனேஜரால் வளர்க்கப் படுகிறான்.எப்போதும் குடித்துவிட்டு,எந்தவித பொறுப்பும் இல்லாமல் சுற்றுகிறான்.அவருக்கு குடிப்பதற்குத் துணையாக நெடுமுடி வேணு, இவர் ஒரு எல்.ஐ.சி ஏஜண்ட், ஆனால் முழுநேரமும் ராஜிவ் மேனனோடு சுற்றுவதுதான் முக்கிய வேலையாக வைத்திருக்கிறார்.இவர்கள் குடித்துவிட்டு செய்யும் சில பிரச்சினைகளால் போலீஸாரால் ராஜிவ் கைது செய்யப்படுகிறான்.இந்த விஷயத்தில் மிகவும் மன வேதனை அடைகிற மேனேஜர்,"இனிமேல் என்னால் இங்கே இருக்க முடியாது,எனக்கு வயதாகிவிட்டது,அதனால் உன்னுடைய சொத்துக்களை நீயே பார்த்துக்கொள்" என்று கூறுகிறார். இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது என்றுக் கூறி அவரை சமாதானப்படுதுகிறான் ராஜிவ்.அந்த சமயத்தில் ராஜிவின் கல்யாணத்தைப் பற்றி பேசுகிறார் மேனேஜர்.அந்த பேச்சு மட்டும் வேண்டாம் என பிடிவாதமாக இருக்கிறான் ராஜிவ், காரணம் சிறுவயதிலேயே தன்னைவிட்டுவிட்டு தன் பழையக் காதலனோடு சென்றுவிடுகிற தனது அம்மா ஏற்படுத்திச் சென்ற வேதனை,அதனால் பெண்கள் மீதும், கல்யாணத்தின் மீதும் வெறுப்பாக இருக்கிறான்.
பிறகு ஒரு நாள் வழக்கம் போல் நெடுமுடி வேணுவைத் தேடிப் போகிறார்,அப்போது வேணு ஏதோ சிந்தனையில் இருக்க என்னவென்று கேட்கிறான்.அதற்கு தன் குழந்தைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை,அவர்களை எங்கேயாவது வெளியில் அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தேன்,அதைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்,அதைக் கேட்ட நிமிடத்தில் என் வீட்டுக்கு அழைத்து வாருங்கள் என்று சொல்கிறான் ராஜிவ்.சரியென்று ஒத்துக் கொள்கிற வேணு தன் சொந்த ஊருக்கு சென்று மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியோடு வந்து ராஜிவ் வீட்டில் தங்குகிறார். அவர்கள் தங்கியிருக்கிற ஒரு வாரமும் குழந்தைகள் மூன்றும் ராஜிவிடம் நன்கு ஒட்டிக் கொள்கின்றன.குறிப்பாக வேணுவின் கடைசி மகனை மிகவும் பிடித்துவிடுகிறது ராஜிவிற்கு.
அந்த ஒரு வார காலமும் குழந்தைகளோடு குழந்தையாக மாறிவிடுகிறான் ராஜிவ்.பிறகு விடுமுறை முடிந்து வேணுவின் குடும்பம் கிளம்பிச் சென்றுவிடுகிறது.அவர்கள் சென்றபிறகு வீட்டில் நிலவும் அமைதி ராஜிவை ஏதோ செய்ய மேனேஜரிடம் சொல்கிறான்,
"சவம் விழுந்த வீடு மாதிரி இருக்குல்ல, அங்கிள்" என்று.
"நீயும் கல்யாணம் செய்திருந்தால் உனக்கும் குழந்தைகள்
பிறந்திருக்கும்,வீடே கலகலப்பாக இருந்திருக்கும்"என்று கூறுகிறார் மேனேஜர்.
இலேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்கிறான் ராஜிவ்.அன்றிரவு அந்த குழந்தைகள் நினைவால் தூங்க முடியாமல் தவிக்கிறான். மறுநாள் வேணுவை சந்தித்து,"உன்னுடைய கடைசி மகனை எனக்கு தத்து கொடுப்பாயா?.என் சொத்து முழுவதும் அவன் பெயருக்கே எழுதி வைக்கிறேன்,அவனை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறேன்" என்கிறான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வேணு,சிறிது அமைதிக்குப் பின்,தான் ஏழையா இருக்கலாம்,அதுக்காக பெற்ற குழந்தையை தத்துகொடுக்க முடியாதென்றும், அப்படி கொடுத்தால் தான் ஒரு அப்பன்னு சொல்லிக்கவே தனக்கு தகுதிகிடையாது என்றும்,என் குழந்தைகள் "என்னை அப்பான்னு கூப்பிடும்போது நான் அனுபவிவிக்கும் சுகம் உனக்கு சொன்னால் புரியாது,அதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்"என்று கூறி அங்கிருந்து நகர்கிறார்.
பிறகு அடுத்த நாளே தனது குடும்ப மருத்துவரைப் பார்த்து தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன்,உங்களுக்கு தெரிந்து எதாவது குழந்தை இருந்தால் சொல்லுங்கள் என்கிறான்,அதற்கு "எதாவது ஒரு அனாதை குழந்தை விடுதிக்குத்தான் சென்று பார்க்க வேண்டும்" என்கிறார் டாக்டர்.
எனக்கு அந்த மாதிரி குழந்தைங்க வேண்டாம்,பிறந்த உடனே தாயை இழந்த அனாதை குழந்தை இருந்தா சொல்லுங்க",என்கிறான்.
அது மிகவும் கஷ்டம் என்று சொல்லி வாடகைத்தாய் முறையில் நீ குழந்தை பெற்றுக்கலாம்,அது உன்னுடைய சொந்த குழந்தையாகவும் இருக்கும்" என்கிறார் டாக்டர்.அதைக் கேட்டு சந்தோஷப்படுகிற ராஜிவ் அதற்கான ஏற்பாடுகளை பண்ண சொல்கிறான்.
தனது கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முரளியின் மனைவி ஆனி(ரேகா),தன் கணவரின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான இரண்டு லட்சம் ரூபாய்க்காக வாடகைத் தாயாக சம்மதிக்கிறார்.பரஸ்பரம் இருதரப்பினரும் எழுத்தின் மூலம் ஒப்பந்தம் செய்துகொள்கின்றனர்.
முரளியின் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது, அதே சமயத்தில் ஆனியின் வயிற்றில் ராஜிவின் வாரிசு வளர்கிறது. முரளியும்,ஆனியும் சேர்ந்து இருந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து என்று வேணு,ராஜிவிடம் கூறுகிறார்,இதனால் ஆனியை ஒரு மலை பங்களாவில் இரு செவிலியர்,ஒரு ஹவுஸ் கீப்பர்(சுகுமாரி),ஒரு வாட்ச்மேன் சகிதம் தங்கவைக்கிறான்.மாதங்கள் உருண்டோட ஆனி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார்.பிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக டாக்டரின் அறிவுறுத்தலோடும்,தன் கணவரின் சம்மதத்தோடும்
மேலும் சில நாட்கள்,ஆனி ராஜிவின் வீட்டில் தங்க நேரிடுகிறது.குழந்தை புட்டிப்பால் குடிக்க ஆரம்பித்தவுடன் ராஜிவ் ஆனியை வழியனுப்பத் தயாராகிறார்.அப்போது ஆனியின் செயலும்,அதைத் தொடர்ந்து வரும் இருபது நிமிடக் காட்சிகளும் படத்தின் உயிரோட்டமான பகுதிகள்.
இந்தப் படத்தில் வரும் ராஜிவ் மேனன் காதாபாத்திரத்தை மோகன்லாலைத் தவிர வேறு எந்த நடிகராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்கமுடியாது என்பது என் எண்ணம்.படத்தின் ஆரம்பத்தில் குடித்துவிட்டு அவர் நடந்துகொள்கிற விதமும்,வேணுவின் குழந்தைகளைப் பிரியும்போது அவர் படுகிற வேதனைகளும்,ஆனி கருவுற்ற செய்தி கிடைக்கும் வரையில் தவிக்கிற தவிப்பும், பிறகு செய்தி கேள்விப்பட்டு சந்தோஷத்தில் கூடை,கூடையாய் பழங்கள் வாங்கிக்கொண்டு ஆனியை பார்க்கச் செல்லும்போது,"தயவு செய்து இன்மேல் என்னை பார்க்க வாராதீர்கள்" என்று ஆனி கூறும் போது மனசொடிந்து திரும்பி செல்லும் போதும்,குழந்தை வளர்ப்பது பற்றிய புத்தகங்களை வாங்கி படிக்கும் போதும்,குழந்தை பிறந்தவுடன் "யார் குழந்தையின் அப்பா" என்று நர்ஸ் கேட்க்கும் போது அருகிலேயே முரளியும் இருக்க சந்தோஷமும்,சங்கடமுமாய் அவர் கொடுக்கும் அந்த உணர்ச்சியும்,
"என்னுடைய குழந்தை இல்லையென்றாலும், இது என்னோட ஆனியின் குழந்தை,அதனால் எனக்கும் பாசமுண்டு" என்று முரளி கூறும்போது, சட்டென்று முளைக்கிற கோபமும்,
குழந்தைக்கு வைத்திருக்கும் புட்டிப்பாலை எடுத்து குடிக்கும் போது பார்த்துவிடுகிற சுகுமாரியின் முன் ஒரு குழந்தையைபோல் நெளிவதும் என்று மனிதர் என்னமாய் அசத்துகிறார்.படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை மோகன்லாலின் ராஜ்ஜியம்தான்,எந்த ஒரு இடத்திலும் மிகைநடிப்பை பார்க்கவே முடியாது.
இறுதிக்காட்சியில் அவர் ரேகாவிடமும்,சுகுமாரியிடமும் பேசும் வசனங்களும், நடிப்பும் கண்ணில் நீரை திரள வைக்கும்.
குறிப்பாக சுகுமாரியிடம்,"ஆண்ட்டி,எல்லா அம்மாவும் ஆனியை போலத்தான் இருப்பாங்களா?"எனும்போது,
"ஆமாம்"என்பார் சுகுமாரி.
"அப்போ,என் அம்மா?"என்று ஒரு குழந்தையின் ஏக்கத்தோடு அவர் கேட்கும்போது நமக்கு என்னமோபோல் ஆகிவிடுகிறது.
"உன் அம்மா உன்னை விட்டு சென்றிருந்தாலும்,அவளால் ஒரு நாளும் நிம்மதியாக இருந்திருக்க முடியாது" என்று சுகுமாரி கூறும் போது,
"ஆண்ட்டி,உங்க குழந்தைகளையும் நீங்க இப்படித்தான் நேசிப்பீங்களா?"என்று கேட்பதற்கு,
"ஆம்" என்று தலையசைப்பார் சுகுமாரி,
அதைத் தொடர்ந்து,"ஆண்ட்டி என்னையும் அது மாதிரி
நேசிப்பீங்களா?"என்று கேட்பதோடு படம் முடிவடையும்.
அடுத்தடுத்தப் பதிவுகளில் இன்னும் சில படங்களை பற்றி சொல்கிறேன்.