Thursday, March 6, 2008

காதலாகவே சில கவிதைகள்!

அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!

நீ உண்ணும் போது மட்டுமாவது
உன்னை நினைக்காமலிருக்க
நினைக்கிறேன்,
உனக்கு புரையேறிவிடக்
கூடாதென்பதற்காக!

வான்வெளியைப் பற்றி
ஆராய்ச்சி செய்யுமளவுக்கு
ஞானமிருந்தாலும்,
நீ கேட்கும்,"நிலா பெரியதா?,
நட்சத்திரம் பெரியதா?"
என்பது போன்ற,
குழந்தைத்தனக்
கேள்விக்கெல்லாம்,
தெரியாதென்றே
சொல்லி வைப்பேன்,
"இது கூடத் தெரியாதா?" என்றுக் கூறி,
என்காதைப் பிடித்துத்
திருகுவாயே அதற்காகவே !

என் தங்கையோடு
நானிருந்த புகைப் படத்தை
நேற்று உன்னிடம் காட்டினாளாமே,
அதைக் காணோமென்று
இங்கே தேடிக் கொண்டிருக்கிறாள்
பைத்தியக்காரி!

மார்கழி அதிகாலை
நீ ஈரக்கூந்தலோடு,
கோலமிட்டுக் கொண்டிருக்கிறாய்,
உன் நெற்றியில் ஒதுங்கிய
கற்றைக் முடியில்,
வழிந்து வந்த
ஒற்றைத் துளி நீர்,
நான் காதலை சொல்ல,
தயங்கி நிற்பது போலவே,
கீழே விழலாமா?,வேண்டாமா?
எனத் தயங்கி நிற்கிறது!

No comments: