தனிமை, எப்போதுமே எனக்கு நெருக்கமான தோழன். சோகத்திலோ,விரக்தியின் பிடியிலோ,மனம்கொள்ளாத மகிழ்ச்சியிலோ,என்னை நானே சுய அலசல் செய்துகொள்ளும்போதோ எனக்குத் துணையாக இருப்பது தனிமையே.
இந்த தனிமை நண்பன், எனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான்,கவிதை எழுதவும்,விழித்துக்கொண்டே கனவுகள் காணவும்,நினைவுகளை மீட்டிச் சிரிக்கவும்,கண்ணாடி முன் நின்று சில கதாநாயக சேட்டைகள் செய்து பார்க்கவும்,என்னை நானே பிரமிக்கவும்,வெறுக்கவும் இன்னும் இப்படி எத்தனையோ.
எப்போதிலிருந்து நான் தனிமையை நேசிக்க ஆரம்பித்தேனென்று தெரியவில்லை.கல்லூரிவரை ஒரு சிறிய நகரத்திலே பயின்று வேலைத்தேடி சென்னை மாநகருக்கு வந்த பொழுது ,சென்னையின் பிரமாண்டமும், வாழ்க்கை முறையும் மிரள வைத்தபோதோ, கவிதை,கதை,இசை என கலைகள் சார்ந்த நாட்டமுடைய எனக்கு, எத்தனையோ நண்பர்கள் இருப்பினும், என் அலைவரிசையில் ஒரு நட்புகூட அமையாது இருந்த போதோ,அதிகமாய் கற்பனையில் சஞ்சரிக்குமெனக்கு எதார்த்த வாழ்க்கை அன்னியமாய் தெரிந்த ஒரு கணத்திலோ,சொந்தங்களின் அன்புப் பிடியில் சிக்கி, விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தடுமாறியபோதோ இந்தத் தனிமை சிநேகமாகியிருக்கலாம்.
நட்பு வட்டத்தோடு கும்பலாக சென்றாலும்கூட மனம் எப்போதும் எதையோத் தேடி தனிமையிலேயே இருக்கும்.
இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு எது தனிமை என்பதும்,அதன் வலி என்ன என்பதும் இப்போதுதான் புரிகிறது,இதுநாள்வரை நான் இருந்தது தனிமையே இல்லை.இப்போது அயல் நாட்டில் என்னைச் சுற்றி எத்தனையோ மனிதர்கள்,புரியாத மொழி,தனியாக வீடு, அதில் எனக்கு பிடித்ததாக நினைத்தத் தனிமையோடு நான்.
இந்தத் தனிமை பொல்லாதது.நட்பு வட்டத்தில் தனிமை தேடிய மனது இப்போது தனிமையில் நட்பைத் தேடுகிறது.அன்றாட நிகழ்வுகளை தனிமையில் அசைபோடுவது சுகம்,அன்றாட நிகழ்வுகளே தனிமையாய் இருந்தால் அது கொடுமை.
டிஸ்கி:இதன் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் கூடி கும்மியடிப்பதில் உள்ள சுகம் எனக்கு இப்போதுதாணுங்கோ தெரிஞ்சிருக்கு...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment