Friday, May 1, 2009

கானக்குயில் - சுவர்ணலதா..!

1982 ல் வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் அறிமுகபடுத்தப்பட்டவர். முந்தைய தலைமுறை பாடகிகளில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு எப்படி ஒரு தனித்த அடையாளம் கிடைத்ததோ அது போன்றே கேட்ட உடன் தெரிந்துகொள்ளக் கூடிய வித்யாசமான சொர்ண குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ண லதா.

எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 90-ல் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல்தான் இவரை பிரபலபடுத்தியதென்றால் மிகையில்லை.அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தின் "போவோமா ஊர்கோலத்திற்காக" தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்று தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பல படங்களுக்கு பாடும் வாய்ப்பை பெற்று 90களில் தமிழ் திரையுலகில் கோலாச்சினார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

இளையராஜாவின் அற்புதமான இசையில் இவர் பாடிய "மாலையில் யாரோ மனதோடு பேச","என்னுள்ளே என்னுள்ளே" போன்ற பாடல்களால் இசைப் பிரியர்கள் மட்டுமன்றி சக பின்னணி பாடகர்கள்,பாடகிகளையே தன் குரலால் மதிமயங்கவைத்தவர்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்த்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவரின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடியிருக்கிறார்.1996ம் ஆண்டு வெளியான "கருத்தம்மா" படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருது இவரைத் தேடிவந்தது. ரஹ்மானின் இசையில் சில ஹிந்தி படங்களிலும் பாடியிருக்கிறார்.

இவர் பாடிய மேலும் சில பாடல்கள்:
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட -உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்ம துரை
அடி ராக்கம்மா கையத் தட்டு - தளபதி
கண்ணில் ஆடும் ரோஜா -கேப்டன்
உன்னை எதிர் பார்த்தேன் - வனஜா கிரிஜா
அந்தியில வானம் - சின்னவர்
உசிலம்பட்டி பெண்குட்டி - ஜென்டில் மேன்
முக்காலா முக்காபுல்லா -காதலன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
புது ரோஜா பூத்திருக்கு -கோகுலம்
மல்லியே சின்ன முல்லையே -பாண்டித்துரை
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்
அக்கடான்னு நாங்க -இந்தியன்
குச்சி குச்சி ராக்கம்மா - பம்பாய்
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் - பாட்டு வாத்தியார்
(ரொம்ப நீளமான பட்டியல் இருக்கு)

இசையமைப்பாளர்கள் தேவா,சிற்பி,பரத்வாஜ்,வித்யாசாகர்,ஹாரிஸ் ஜெயராஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பில் பல ஹிட்பாடல்களை பாடியிருக்கும் இவரின் குரலை இப்போது வரும் பாடல்களில் கேட்க முடிவதில்லை,சுவர்ணலதாவின் காந்த குரலை மீண்டும் நிறைய பாடல்களில் கேட்க வேண்டும் என்ற ஒரு சாதாரண ரசிகனின் வேண்டுகோளாய் இந்த பதிவு.


No comments: