Monday, December 3, 2007

காதல் சாலை!!!

அது ஒரு மழைக்காலம்,
மழை நின்ற ஒரு இடைவெளியில்
நீ பள்ளி செல்ல ஆயத்தமாய்
வீட்டை விட்டு வெளியே வருகிறாய்,
உன் வீட்டிற்கும்,சாலைக்கும்
இடைப்பட்ட தூரத்தில்
தேங்கி நின்ற மழை நீரில்
கால் படாமல் இருக்க
கற்களை வைத்திருந்தார்கள்,
நீ ஒரு கல் விட்டு ஒரு கல்
தாண்டிய படியே வருகிறாய்,
உன் பாதம் படாத கற்களின்;
ஏக்கம் உனக்குத் தெரியுமா?!

பிறகு உன் தோழியர் கூட்டத்தோடு
இணைந்து பயணத்தைத் தொடர்கிறாய்,
எல்லோரும் ஒரே மாதிரியான சீருடைதான்
அணிந்து செல்கிறீர்கள்;
ஆனாலும் நீ தனித்துத் தெரிகிறாய்!!,

என்ன நினைத்தாயோ தெரியவில்லை,
திடீரென ஓடி,
ஒரு மரத்தின் கீழே நின்று
அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்,
தோழியரும் ஆர்வமாய் ஓடி வந்து
என்னவென்று வினவியபடியே
அண்ணார்ந்து பார்க்கையில்,
யாரும் அறியாமல்
தணிந்திருந்த ஒரு
கிளையை பிடித்து உலுக்குகிறாய்,
இலையில் தங்கிய மழை நீர்
தோழியரை நனைக்க,
அவர்கள் பொய் கோபத்தோடு உன்னைத் துரத்த
நீ முன்னே ஓடுகிறாய்,
என்ன தவம் செய்தது சாலை!!

நீ உலுக்கிய கிளையை
எனக்கு நானே உலுக்கி
நனைந்து களித்து
உன்னைத் தொடர்கிறேன்,


அடுத்து எதிர்பட்ட
கால்வாய் மதகடிப் பாலத்தில்
ஒரு புறம் இறங்கி
காகிதக் கப்பலை விட்டு
மறுபுறம் ஓடி வந்து பார்க்கிறாய் ,
மறுபுறம் வெளிவந்தக் கப்பல்
அருகில் இருந்த சுழியில் மாட்டி,
நான் உன்னைச் சுற்றுவது போலவே
சுற்றுவதைப் பார்த்து,
ஆனந்தப்பட்டு துள்ளி குதிக்கிறாய்,

பள்ளியை நெருங்கிய சமயத்தில்
மீண்டும் தூரல் விழத்தொடங்க
எல்லோரும் அவசரமாய் குடை விரிக்கையில்,
நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,
அந்த கணத்திலிருந்து எனக்குக்
குடையே பிடிக்கவில்லை!!!

No comments: