Sunday, December 23, 2007

நிலவைக் காணவில்லை!!

நிலவே!
நீ முழுதாய்த் தெரிந்தால்
காதலியின் முகத்துக்கும்,
பாதியாய்த் தெரிந்தால் இதழுக்கும்,
அதிலும் பாதியாய்த் தெரிந்தால்
புருவத்துக்கு ஒப்பிடுகிறார்கள்,
உனக்குப் புகழ்ச்சியே
பிடிக்காது போலும்
அதனால்தான்
முகம் காட்ட மறுக்கிறாயோ!!!
********************
என்ன குற்றம் செய்தாளென்று
தலைமறைவாகிப் போனாள்
நிலாப் பெண்!!!
*******************
வானத்தில் ஹோலி
யார் வீசியது கருப்புச் சாயத்தை
நிலாப் பெண்மீது!!!
********************
எந்த காதலனோடு
இரவோடு இரவாக
ஓடிப் போனாள்
நிலாப் பெண்!!!!
*******************
ஏய் நிலவே!
நீ இருந்தாலும்
இவ்வளவு கல்நெஞ்சக் காரியா?
உன்னை காட்டித்தானே
என் குழந்தைக்கு சோறூட்டுவேன்
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
எங்கே போனாய்?!
*****************
பகலெல்லாம் என் காதலன்
கொடுத்த வெளிச்சத்தில்
எதைச் சாதித்தீர்கள்
என்றெண்ணித் தானோ என்னவோ
சும்மாவே இருந்து விட்டாய்!!!
******************
நீ, நல்ல பெண்தான்,
ஆனாலும் சமயங்களில்
பகலிலும் தெரிவாய்,
இப்படி நேரம் கெட்ட நேரத்தில்
வெளியே வரலாமா?-ஒரு வேளை
உன் சூரியக் காதலனை
உளவு பார்க்க வந்து,
அதனால் அவன் கோபத்திற்கு ஆளாகி
பொசுங்கி போயிருப்பாயோ!!!
***************
ஏய் நிலவே!
எனக்கு உதவி செய்ய
மறைந்து கொண்டாயா?-இல்லை
என் தொழிலைக் காணச் சகிக்காமல்
முகம் மூடிக் கொண்டாயா
புரியாமல்த் தவித்தது
திருட்டுப் பய மனசு!!!

ஆம், இன்று அமாவாசை!!!

No comments: