Saturday, January 17, 2009

படிக்காதவன் என் பார்வையில்:

7G ரெயின்போ காலனி,பருத்திவீரன் இந்த இரண்டு படங்களுக்கு பிறகு எனது தூக்கத்தை கெடுத்த படம் படிக்காதவன்.தூக்கம் தொலைந்தது மட்டுமே ஒற்றுமை மற்றபடி காரணம் வேறு.இந்த படத்தை பற்றி எழுத எங்கேயிருந்து ஆரம்பிக்க ஒன்னுமே புரியல (படத்தோட ஸ்கிரீன்பிளே மாதிரி).

கதையென்று பார்த்தால் எல்லோரும் படித்தவர்களாக இருக்கும் குடும்பத்தில் படிக்காதவன் தனுஷ்.வழக்காமான தனுஷ் படத்தின் அப்பாக்கள் போலவே இதிலும் அப்பா(பிரதாப் போத்தன்) திட்டிக் கொண்டே இருக்கிறார்.இதனால் எப்படியாவது ஒரு டிகிரி வாங்கிவிட முயல்கிறார் தனுஷ்,முயற்சிகள் தோல்வியில் முடிய நண்பர்களின் தூண்டுதலில் படித்த பெண்ணான தமனாவை லவ் பண்ணுகிறார்.(இதுவரைக்கும் ஏதோ ஸ்டோரி இருக்கிற மாதிரியே இருக்கும் ஆனால் இல்லை).இதற்கிடையில் தனுஷ் ஒரு வில்லன் கும்பலோடு மோத நேரிடுகிறது,அதனால் அவர்கள் தனுஷை ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்க, தனுஷைத்தான் ஃபாலோ செய்கிறார்கள் என நாம் நினைக்கும் போது திடிரென தமனாவை துரத்துகிறார்கள்.அங்கே இன்னொரு புது வில்லன் குரூப் வந்து தமனாவை காப்பாற்றுகிறார்கள். அப்போது தமனாவின் அப்பாவாக வில்லன் சுமன் என்டராகி தமனாவை ஆந்திராவிற்கு அழைத்துச் செல்கிறார்.இங்கே நீங்க கவனிக்க வேண்டியது தனுஷை துரத்தியது வேறொரு வில்லன் குரூப்(என்ன மண்ட காயுதா).

பிறகு விவேக்கை(இவரும் ஒரு ரௌடி) அழைத்துக்கொண்டு தனுஷ் ஆந்திரா செல்கிறார். அதன் பின் பொல்லாதவன் படத்தை நினைவூட்டும் ஒரு பிளாஷ்பேக், அதுனுள் ஒரு வில்லன் குரூப்(ஜண்டுபாம் தடவிகிட்டு கண்டினியூ பண்ணுங்க) பிறகு ரன் படத்தின் கிளைமாக்ஸோடு அதே ரன் அதுல் குல்கர்னியோடு மோதி காதலில் வெற்றிபெறுகிறார்.

மேலே சொன்னது எதுவும் புரியவில்லையெனில் படத்தை பற்றிய சரியான விமர்சனத்தை நான் எழுதியிருக்கிறேன் என்றே அர்த்தம்.

தனுஷ் நன்றாகவே நடித்திருக்கிறார்.கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு தமனாவிடம்"எஸ்சுஸ்மி ஐ லவ் யூ " என்று ரொமான்ஸ் பண்ணும்போதும், வயது வித்யாசமின்றி இருக்கும் நட்பு வட்டத்தில் அடிக்கும் லூட்டிகளிலும் கலக்கியிருக்கிறார். தனுஷ் உங்க உடலமைப்பை பற்றி எழுதப்படும் வசனங்களும், காட்சிகளும் நிறைய படங்களில் பார்த்து போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு,கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்.

தமனா,அழகாக இருக்குது பாப்பா,படத்தின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது அவ்ளோதான்.

தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கதாபாத்திரத்தின் இரண்டாம் பாகத்தை இந்த படத்தில் விவேக் செய்திருக்கிறார். பாடிலாங்வேஜ் உட்பட அப்படியே வடிவேலு மாதிரியே செய்திருக்கிறார்.(புதுசா ஏதும் அறிவுரை தோணலையா கருத்து கந்தசாமிக்கு).

மணிஷர்மாவின் இசையில் "காதலும் கடவுளும்" பாடல் நல்ல மெலடி, மற்ற பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கும்படி இல்லை.

அடியாட்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக இருக்கிறது வில்லன்களின் எண்ணிக்கை.யாருக்கு யாரோட என்ன பிரச்சினை ஒன்னும் புரியல.எல்லா அடியாட்களும் யூனிஃபார்ம் அணிந்து ஆளுக்கொரு கொக்கு சுடும் துப்பாக்கியோடு திரிகிறார்கள்(எங்கேயிருந்துதான் திங் பண்றா(னு)ங்களோ).


சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் தரத்தையும் ,தமிழனின் ரசனையையும் வேறு தளத்திற்கு நகர்த்தும் முயற்சியில் இருக்க இயக்குனர் சுராஜ் நம்ம ரசனையை பக்கத்து மாநிலத்திற்கு(ஆந்திரா) நகர்த்த செய்த முயற்சி இந்த படம்.


மொத்தத்தில் வில்லுவின் வெற்றியை உறுதி செய்ய வந்த படம் இந்த படிக்காதவன்.

டிஸ்கி:இந்த பதிவு எழுதி post செய்து நான்கு நாட்களாய் publish ஆகாமல் இருந்ததை இப்போதுதான் பார்த்து publish செய்கிறேன்.இன்நேரம் படம் பார்த்து நொந்து போயிருப்பீர்கள்.இருந்தாலும் எழுதியதை என்ன செய்யறது.

No comments: