Thursday, January 1, 2009

குட்டி கதைகள்

1.Me.. the first (தலைப்பு உபயம்-கே.ரவிஷங்கர்)

ரொம்ப படபடப்போடு இருந்தான் அருண்.நேரம் நெருங்க நெருங்க இதயத் துடிப்பு தாறுமாறாய் எகிறியது.

இன்னும் ஒரு சில நொடிகளுக்குள் சிக்னல் கிடைத்ததும் கையில் உள்ள பொருளை ராகுலிடம் எவ்வளவு விரைவாக ஒப்படைக்க முடியுமோ அவ்வளவு வேகமாக கொடுக்க வேண்டும்.

"சிக்னல் கிடைத்ததும் தாமதிக்காம கிளம்பிடு அருண், உனக்காக ராகுல் ரெடியா இருப்பான் எந்த சந்தர்ப்பத்திலேயும் பின்னால யாரும் வறாங்களான்னு திரும்பி திரும்பி பார்க்காம போயிட்டே இரு,எதாவது சொதப்பின நாம இத்தனை வருட எடுத்த பயிற்சி,போட்ட திட்டம் எல்லாத்துக்கும் அர்த்தம் இல்லாம போயிடும்" என்று பாஸ் சொன்னதை மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தபோதே துப்பாக்கி சுடும் சத்தம்.

சத்தம் கேட்ட நொடியில் கையில் மரக்குழலோடு ராகுலை நோக்கி தனக்கான ட்ராக்கில் ஓடினான் அருண் அந்த மாநிலம் தழுவிய 4x100 ரலே ஓட்டத்தில்,நினைத்தது போலவே முதலிடம் பெற்ற தனது மாணவர்களை ஆரத்தழுவி கொண்டார் அவர்களுடைய கோச் பாஸ் என்கிற பாஸ்கர்.

2.வேலிதாண்டி விளையாடு:(தலைப்பு உபயம்-கே.ரவிஷங்கர்)

புறநகர் பகுதியில் இருக்கும் அந்த வீட்டின் வெளிப்புற கேட்டில் பெரிதாக பூட்டு தொங்கியது.காம்பவுன்ட் சுவர் அருகே நின்று சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான் மணி.ஆள் நடமாட்டம் இல்லை.

"டேய் சீக்கிரண்டா"சொன்னான் அவன் கூட்டாளியான கதிர்.

"கதிரு நல்லா தெரியுமாடா,உள்ள யாரும் இல்லைன்னு"

"தெரியுண்டா,மூனு நாளைக்கு முன்னால எல்லோரும் எங்கேயோ கிளம்பி போனத நான் பார்த்தேன்,இன்னும் வரல"

"வாட்ச்மேன்?"

"இந்த வீட்டுக்கு வாட்ச்மேனே இல்லடா,சும்மா பேசிட்டே இருக்காம யாராவது வரதுக்குள்ள சுவரேறி குதிடா"

"சரிடா"என்று சொன்னபடியே ஒரே ஜம்பில் காம்பவுண்டில் ஏறி உள்ளே குதித்து, பரபரப்பாய் தேடினான், அந்த காம்பவுண்டுக்குள் தவறி விழுந்த கிரிக்கெட் பந்தை.

3. லஞ்சம் வாங்காத போலீஸ் ( தலைப்பு உபயம்-சின்ன அம்மிணி)

வாகனங்கள் அடர்த்தியாய் செல்லும் அந்த ஹைவேயில் ஜான்சனின் பைக் அசுர வேகத்தில் போய்கொண்டிருந்தது,பைக் சிட்டி லிமிட்டுக்குள் நுழைந்தும் அதே வேகம்.

பாதசாரிகள், மின்னல் வேகத்தில் கடந்த ஜான்சனை மிரட்சியோடு பார்த்தனர்.
வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கமால் ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடியே போய்க்கொண்டிருந்த ஜான்சன் அடுத்து எதிர்பட்ட சிக்னலில் எரிந்த சிவப்பு விளக்கையும் மதிக்காமல் போனதைக் கண்ட ட்ராபிக் போலிஸ் அவனை விரட்டத் தொடங்கினார்.

கொஞ்சமும் சட்டையே செய்யாமல் போய்கொண்டே இருந்த ஜான்சனை போலிஸ் மிகவும் நெருங்கிவிட, இனியும் தாமதம் வேண்டாமென அவசரமாய் அழுத்தினான் விசைப் பலகையில் உதைப்பதற்கான கட்டளை பொத்தானை, கம்ப்யூட்டரில் ரோட் ரேஸ் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஜான்சன்.

4.அ(ட)ப்பாவி ( தலைப்பு உபயம்-நிலோஃபர் அன்பரசு)
பொங்கல் சமயமென்பாதால் பஸ்ஸில் சரியான கூட்டம்.அனேக பயணிகளின் கையில் பர்சேஸ் செய்த பொருட்கள்.

"பையெல்லாம் பத்திரமா வெச்சுகோங்க" கண்டக்டர் அடிக்கடி எச்சரித்தபடியே இருந்தார்.

முத்து திருதிருவென முழித்துக்கொண்டே பஸ்ஸில் இருக்கும் எல்லோரையும் நோட்டமிட்டபடி இருந்தான்.

பஸ்ஸில் ஆங்காங்கே திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்துகொண்டே திரும்பியவன் அந்த இளம்பெண் தன்னை கவனிப்பதை பார்த்தான்.தன்னைத்தான் பார்க்கிறாளா என்பதை அறிய வேறுபக்கமாய் முகத்தைத் திருப்பி சிறிதுநேரம் கழித்து மீண்டும் அவளைப் பார்த்தான்,இப்போது அவள் அருகே அமர்ந்திருக்கும் அவளது கணவனிடம் இவனைக் காட்டி ஏதோ காதுக்குள் கிசுகிசுத்தாள்.

"மாட்டினா தனது நிலை என்னவாகும்"என நினைத்தவன் வேகமாக நகர்ந்து படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டான்.


இப்போது பஸ்ஸில் உள்ள மேலும் சிலர் இவனை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாய் உணர்ந்து அடுத்து வந்த ஸ்டாப்பில் பஸ் நிற்பதற்கு முன்னமே குதித்து"அப்பாடா" என பெரு மூச்சு விட்டான், பர்ஸை தொலைத்துவிட்டு டிக்கெட் வாங்க கூட காசு இல்லாமல் வித் அவுட்டில் வந்ததால் பயந்த முத்து.


கொசுறு:இங்கே இருக்கும் இந்த நான்கு குட்டி கதைகளுக்கும் என்ன தலைப்பு வைக்கலாமென்று சொல்லிட்டு போங்க நண்பர்களே.பொருத்தமான தலைப்பிற்கு பரிசெல்லாம் கிடையாது,ஆனால் நீங்கள் கொடுக்கும் தலைப்பையே சூட்டி அருகே தலைப்பு உபயம் என உங்கள் பெயரை வலைவெட்டில்(கல்லில் எழுதினா கல்வெட்டு,வலையில் எழுதினா வலைவெட்டுதானே ஹி ஹி) பொறித்துவிடுகிறேன்.அப்படியே கதையை பற்றிய உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க மக்கா.


கொசுறு புதுசு:தலைப்பு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

No comments: