ஐந்து வருடங்கள் அன்னிய நாட்டில் குப்பைகொட்டிவிட்டு இதோ இப்போதுதான் எனது சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன்.
புதிதாக ஓரிரு மாடி வீடுகள்,புழுதியை கிளப்பியபடி போகும் மினிபஸ் தவிர இத்தனை வருடத்தில் பெரிதாக மாற்றம் ஒன்றுமில்லை. இன்னொரு பெரிய மாற்றம் என்றால் அனேக பெண்கள் நைட்டிக்கு மாறியிருக்கிறார்கள், அதென்னவோ தெரியவில்லை நைட்டியை அணிந்துகொண்டு,மேலே துண்டு ஒன்றையும் போட்டிருக்கிறார்கள் 'காலாச்சார தடுமாற்றம்'. யோசித்தபடியே நட்ராஜின் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.
"நட்ராஜ்" என்னுடைய நண்பன்.நட்பு,நண்பன் போன்ற வார்த்தைகளை நான் கேட்டிராத காலத்திலிருந்தே அவனை எனக்கு தெரியும்.கால ஓட்டத்தில் எத்தனையோ நண்பர்கள் எனக்கு கிடைத்திருந்தாலும் நட்ராஜ் கொஞ்சம் ஸ்பெஷல்.
சிறுவயதில் தட்டாம் பூச்சி பிடித்ததிலிருந்து கல்லூரியில் பட்டாம்பூச்சிகள் பார்த்ததுவரை எங்களுக்குள் பகிர்ந்துகொள்ள ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பினும் அவனை எனக்கு மற்றவர்களிடமிருந்து வித்யாசபடுத்தி காட்டியது அவனுடைய இலக்கிய ஆர்வமும்,புரட்சி சிந்தனைகளும்தான். பத்தாம் வகுப்பு படித்தபோதே சேகுவாரா,லெனின் பற்றியெல்லாம் பேசுவான்.
கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதுகிறேன் பேர்வழியென்று "வானத்துல தெரியுது நீலம்,நீதான் எனக்கு பாலம்" மாதிரியான மொக்கைகளாக எழுதிக் கொண்டிருந்த எனக்கு வண்ணதாசன்(கல்யாண்ஜி), கலாப்பிரியா என இலக்கியவாதிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்தியதும் அவன்தான்.
விடுமுறை நாட்களில் எங்களுடைய மற்ற நண்பர்கள் பெரும்பாலும் சாவடியில் அமர்ந்து சரோஜா தேவியில் மூழ்கியோ அல்லது ஏதாவது பெண்களின் அந்தரங்க நடவடிக்கைகளை ஆராய்ந்து கொண்டோ இருக்கும் வேளைகளில்,நாங்களிருவரும் ஏரிக்கரை ஆலமரத்தின் தணிந்த கிளையில் அமர்ந்தோ அல்லது காட்டாற்று அணைக்கட்டில் அமர்ந்தோ கல்கியையோ,சாண்டில்யனையோ வாசித்துக்கொண்டு இருப்போம்.
கல்லூரி படிப்பு முடிந்து நான் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது அவனுக்கு ஊரைவிட்டு வரமனமில்லாமலும் ,அவனுக்கு பிடித்த லெக்சரர் வேலைக்கு முயற்சி செய்யும் பொருட்டும் ஊரிலேயே இருந்துவிட்டான்.
இப்படியாக அவனைப் பற்றி யோசித்தபடியே போய்கொண்டிருந்தபோதே நட்ராஜ் எதிரே வந்துகொண்டிருந்தான்.
"சரவணா,வா வா வா இப்போதான் வந்தியா?,காலையிலிருந்து உங்க வீட்லதாண்டா இருந்தேன்" முகமெங்கும் பிரகாசமாய் என்னை வரவேற்றான்.
"டேய் நல்லா குண்டடிச்சிட்ட,அமேரிக்கா கிளைமேட்டுக்கு நல்லா கலராவும் ஆயிட்டடா" என்றான்.
"அது சரி நான் அப்போதிலிருந்தே கொஞ்சம் குண்டாத்தான் இருப்பேன்,நீ என்னடா இவ்ளோ பெருசா இருக்கே" என்று கேட்டபடியே அவனை பைக்கில் ஏற்றிக்கொண்டு அணைக்கட்டு பக்கமாய் வண்டியை செலுத்தினேன்.
"சரவணா,இன்னும் எவ்ளோ நாள்டா இங்கே இருப்ப"
"இன்னும் ஒரு வாரம் இருப்பேன்டா,அடுத்தவாரம் சென்னையில் புது கம்பெனியில் ஜாய்ன் பண்ணனும்"
"அப்படியா,எனக்கும் கூட காலேஜ்ல செமெஸ்டர் லீவு முடிய இன்னும் பத்து நாள் இருக்குடா"என்று அவன் சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.இப்படியே ஆரம்பித்த எங்கள் பேச்சு கடந்த ஐந்து வருடங்களில் ஊரில் நடந்த சம்பங்கள்,அவன் வேலை பார்க்கும் கல்லூரியின் சுவையான நிகழ்ச்சிகள் என ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தேன்.
சிறுவயதில் எங்கெல்லாம் சுற்றினோமோ அங்கெல்லாம் சுற்றி,ஏராளமான கதைகள் பேசியபடியே நான்கைந்து நாட்கள் ஓடிவிட்டது.நான் ஊருக்கு புறப்படுவதற்கு முதல்நாள் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அவனுடைய சில மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினான்.
அந்த மாணவர்கள் நட்ராஜின் மேல் வைத்திருந்த அன்பு கலந்த மரியாதை என்னை ஆச்சர்யபடுத்தியது,அவர்களிடம் பேசியபோது அவர்கள் நட்ராஜை பற்றி என்னிடம் கூறிய வார்த்தைகள் ,நான் நட்ராஜை வாடா போடா என்று கூப்பிடுவதற்கே கொஞ்சம் தயக்கமாக இருந்தது, அந்த அளவிற்கு அவன் எல்லோராலும் மதிக்கபடும் நபராய் இருக்கிறான்.
பிறகு அவர்கள் ஒரு சிறிய இலக்கிய கூட்டம்போல் நடத்தினார்கள்,நட்ராஜும் அவன் மாணவர்களும் கலந்துரையாடியதை கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
அன்று இரவு தூங்கமுடியாமல் ஏதேதோ சிந்தனை.எதையோ மிஸ் பண்ணிட்ட மாதிரி இருந்தது,"சே,நட்ராஜ் எவ்ளோ அருமையான ஒரு வாழ்க்கை வாழறான்",நான் வாழ்றது ஒரு வாழ்க்கையா" என மனசு நிலை கொள்ளாமல் தவித்தது.
இன்னும் இரண்டு வருடத்தில் நாமும் ஊர்பக்கமாக வந்து செட்டில் ஆகிட வேண்டியதுதான்.சம்பளம் குறைவாக இருப்பினும் நிறைவான வாழ்க்கையல்லவா நட்ராஜ் வாழ்கிறான் என பலவாறு யோசித்துக்கொண்டே உறங்கிப்போனேன்.
அடுத்த நாள் ஊருக்கு வழியனுப்ப நட்ராஜ்தான் பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் வந்திருந்தான்.பஸ் வந்து கொண்டிருந்தது.
"ஹூம் நாளையிலிருந்து லாஜிக்,பக்(bug) என மீண்டும் நரக வாழ்க்கையென" மனதிற்குள் நினைத்துக் கொண்டே,
"சரி நட்ராஜ் நான் வரேன்டா,போயிட்டு போன் பன்றேன்"என்றதும்,
நட்ராஜ் என் கைகளை பிடித்துக் கொண்டு , "சரவணா ,சென்னையிலே ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுடா" நானும் வந்திடுறேன்,எவ்ளோ நாளைக்குதாண்டா குண்டுசட்டியிலேயே குதிரை ஓட்டுறது,எதாவது ஒரு சேஞ்ச் வேணும்னு தோணுதுடா"என்றவனிடம் என்ன சொல்வதென தெரியாமல் பஸ் ஏறிய என்னை புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றான் நட்ராஜ்.
கொசுறு:இந்த சிறுகதைக்கு எதாவது பொருத்தமான பெயர் சொல்லுங்க,நான் நினைத்திருக்கும் பெயரை யாராவது சொல்றீங்களான்னு பார்க்கலாம் என்று கேட்டிருந்ததை தொடர்ந்து "அக்கரைப் பச்சை"யென்று நான் நினைத்திருந்த தலைப்பையே அருணா அவர்களும் கூறியிருக்கிறார்கள்.மேலும் நண்பர்கள் முரளி கண்ணன்,வெங்கட்ராமன்,குடுகுடுப்பை,வெயிலான் மற்றும் ராஜூ ஆகியோர் சொன்ன தலைப்பில் வெங்கட்ராமன் சொல்லியிருந்த மனக்குரங்கு மற்றும் ராஜூவின் விட்டில் பூச்சிகள் ஆகிய தலைப்புகள் எனக்குப் பிடித்திருந்தது.வெயிலான் சொல்லியிருக்கும் தலைப்பிற்கு எனக்கு வேறொரு நாட் தோன்றியிருக்கிறது. கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment