Friday, December 19, 2008

இந்த நடிகர்களை உங்களுக்கும் பிடிக்குமா?

பத்துபேரை ஒரே நேரத்தில் பந்தாடி புவி ஈர்ப்புவிசையையே கேள்விக் குறியாக்குவது,டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என கைடெசிபலில் கத்தி பஞ்ச் டயலாக் பேசி காதுகளை பஞ்சராக்குவது,அந்நிய நாட்டு தெருக்களில் அத்தனைபேர் பார்க்க கார்த்திகை மாத தெருவோர நன்றியுள்ள ஜீவன்களின் நடவடிக்கைகளையொத்த செயல்களில் டூயட் என்ற பெயரில் கதாநாயகிகளின் அங்கங்களை ஆராய்ச்சி செய்வது என சாகசங்கள் பலவும் செய்ய வேண்டியிராத, கேரக்டர் ஆர்டிஸ்ட் என்றழைக்கப்படும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பெரிதாக அங்கீகரிக்கப் படாமல் இருக்கும் சில சிறந்த தமிழ் நடிகர்களை பற்றி ஒரு நினைவூட்டல் இப்பதிவு.

வழக்கமாய் பிறமாநிலங்களில் இருந்து கதாநாயகிகளை இறக்குமதி செய்யும் தமிழ்சினிமாவில் இப்போதெல்லாம் வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரங்களுக்கும் பிறமாநில நடிகர்களை நடிக்க வைப்பது அதிகரித்திருக்கிறது.

கோட்டா சீனிவாசராவ்,ஆந்திராவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.தெலுங்கு "யாரடி நீ மோகினி"யில் தமிழில் ரகுவரன் ஏற்ற கதாபாத்திரத்தை இவர்தான் செய்திருப்பார். மிகவும் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார், அதே மாதிரி இன்னும் நிறைய படங்களில் தான் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிறுபித்திருப்பார். ஆனால் தமிழில் இவர் நடிக்கும்போது தெலுங்கு படம் பார்ப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தும்படிதான் இருக்கும் இவரது பாடிலாங்வேஜ்.ஆஷிஸ் வித்யார்த்தி ஒரு சிறந்த நடிகர் என்றபோதிலும் தமிழில் இவர் வசனங்களை உச்சரிக்கும்போது இவரின் வாயசைவு தமிழ் உச்சரிப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதை கவனிக்கலாம், நெடுமுடி வேணு இந்தியாவில் உள்ள மிக அற்புதமான நடிகர்களை பட்டியலிட்டால் முதல் பத்து இடங்களுக்குள் இவருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு, ஆனால் தமிழில் இவருக்கும், இன்னொரு மலையாள நடிகரான முரளிக்கும் நடிகர் ராஜேஷின் இரவல் குரல் தேவைபடுகிறது.

கலைக்கு மொழியில்லை என்பார்கள் ஆனால் மேற்சொன்ன இந்த நடிகர்களுக்கு மொழி காரணமாகவே தங்களது உண்மையான திறமையை இங்கே வெளிப்படுத்த முடியாமல் போகிறது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்,இப்படி பிறமாநில கலைஞர்களை வரவழைத்தும் வாழவைப்பது தமிழனின் பரந்த மனப்பாண்மையை காட்டினாலும் பிஸியாக இருக்கும் பிறமாநில நடிகர்களை தேடிப்போய் வாய்ப்பை வழங்கி அவர்களையும் கஷ்டப்படுத்தி, பார்க்கும் ரசிகனையும் கஷ்டபடுத்தும் நம் இயக்குனர்கள், குணச்சித்திர நடிப்பில் அற்புதமாக நடிக்கக் கூடிய சில தமிழ் நடிகர்கள், வாய்ப்புகள் இல்லாமலோ அல்லது சரியாக பயன்படுத்த படாமலோ இருப்பதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அந்த வகையில் சிறந்த தமிழ் நடிகர்களாக நான் நினைக்கும் சில நடிகர்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

டெல்லி கணேஷ்:

உலக நாயகன் கமலின் ஆஸ்த்தான நடிகர்களில் ஒருவரான இவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இவரின் முழுமையான திறமையை இன்னும் எந்த இயக்குனரும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றுதான் தோன்றுகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த "ஆஹா" படத்தில் காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பில் பின்னியெடுத்திருப்பார். கொஞ்ச காலங்களுக்கு முன் வாய்ப்புகளே இல்லாமல் இருந்தபோது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். அதில் ஒரு புது பாணி காமெடி நடிப்பை வழங்கி இப்போது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ராஜிவ்:

ஒரு கதாநாயகனுக்கு ஏற்ற வசீகரமான முகம் மற்றும் திறமை இருந்தும் இவர் நடிக்க வந்த காலகட்டத்தில் நான்கு நாயகர்களில் ஒருவர்,இரண்டாவது நாயகன்,வில்லன் என ஆரம்பித்த இவரது திரை வாழ்க்கை அடுத்தடுத்து பெரிதாக வாய்ப்பின்றி இரண்டு சீன்களில் தலைகாட்டும் துக்கடா ரோல்களில் நடிக்கத் தொடங்கி,"காதல் கோட்டை","ஜெயம்" என்று அவ்வப்போது சில படங்களில் நல்ல கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கேற்ப மிக இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர்.இவரிடம் எனக்கு பிடித்த மற்றுமொரு விஷயம் வளமான குரல் மற்றும் தமிழை உச்சரிக்கும் விதம்.

நிழல்கள் ரவி:

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுக படுத்தப்பட்ட இவரின் திற
மைக்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.1985 லிருந்து 1995 வரை வெளிவந்த பல படங்களில் கதாநாயகன்,வில்லன் எனத் தொடங்கி கிட்டத்தட்ட அனைத்துவிதமான கதாபாத்திரதிலும் நடித்திருக்கிறார்.விசுவின் இயக்கத்தில் வெளிவந்த"திருமதி ஒரு வெகுமதி" படத்தில் இவரின் நடிப்பு இவர் ஒரு மிகச் சிறந்த கலைஞன் என்பதற்கு ஒரு சோறு பதம்.இவரின் இன்னொரு சிறப்பு இயல்பாகவும் நடிப்பார்,ஓவர் ஆக்டிங்கிலும் வெளுத்து வாங்குவார்.கிட்டத்தட்ட அனைத்து முக்கியமான இயக்குனர்களின் படங்களிலும் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு.

ரஞ்சித்:

முன்னதாகக் குறிப்பிட்ட நடிகர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகரான இவரும் ஒரு சிறந்த நடிகர் என்பது என் எண்ணம். அறிமுகமான "சிந்து நதிப்பூ"படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார், தொடர்ந்து "பாரதிக் கண்ணம்மா" படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி"நேசம் புதுசு" படத்தின் மூலம் கதாநாயகனாக புரமோஷன் பெற்றார்.பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் பீஷ்மர் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்,படம் பத்திரிகைகளால் பாராட்டப்பட்டாலும் தோல்வியைத் தழுவியது இருப்பினும் இவர், வரும் நாட்களில் சிறந்ததொரு இயக்குனர் ஆவதற்கான அறிகுறிகள் அந்த படத்தில் தெரிந்தது.விக்ரம் அவர்களுக்கு ஒரு பாலா கிடைத்த மாதிரி இவருக்கு யாராவது கிடைத்தால் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு வருவார்.

நடிப்பு என்பது பொய்,அந்த பொய்யை ஒரு மூன்று மணி நேரம் உண்மையென நம்பவைப்பவன் சிறந்த நடிகன்,அந்த வகையில் மேற்சொன்னவர்கள்
மிகச் சிறந்த நடிகர்கள்,இவர்களை போன்று திறமை படைத்த இன்னும் சில நடிகர்களும் இருக்கிறார்கள்.நம் இயக்குனர்க
ள் இவர்களையும் கொஞ்சம் கண்டுகொண்டால் நன்றாக இருக்கும்.


கொசுறு: "சாமி" படத்தில் கோட்டா சீனிவாசராவ் நடித்த கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷை நடிக்க வைக்க முடியுமா? என்பது போன்ற பின்னூட்டங்கள் தவிர்க்க படுகிறது. :)

No comments: