Sunday, November 23, 2008

காணாமல் போன பின்னணி பாடகிகள்:

கொஞ்ச காலங்களுக்கு முன் பல மறக்க முடியாத பாடல்களை பாடி,இன்று வாய்ப்புகள் குறைந்தோ அல்லது இல்லாமலோ போன பின்னணி பாடகியரை பற்றிய ஒரு சிறு நினைவூட்டலே இந்த பதிவு.

ஜென்ஸி:

1980 களின் ஆரம்பத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான ஒருசில படங்களில் நிறைய அசத்தலான பாடல்களை பாடிய தேன் குரலுக்கு சொந்தக்காரர். பாடிய அனைத்துப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டானது வேறெந்த பாடகிக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு. கேரளாவில் அரசு வேலை கிடைத்ததும் அங்கேயே சென்று நிரந்தரமாக செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில் வெளியான இவரின் பேட்டியில் மீண்டும் பாடுவதற்கு ஆவலாக இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் "சரவெடி" படத்தில் பாடப்போகிறார் என்ற செய்தி வெளியாகிருக்கிறது.வந்து கலக்குங்க மேடம்.

இவர் பாடிய பாடல்கள் சில:

தெய்வீக ராகம் -உல்லாச பறவைகள்
என் வானிலே - ஜானி
என் உயிர் நீதானே-ப்ரியா
காதல் ஓவியம் பாடும் காவியம்-அலைகள் ஓய்வதில்லை
ஆயிரம் மலர்களே,இரு பறவைகள் - நிறம் மாறாத பூக்கள்.

உமா ரமணன்:
இசைப்பிரியர்கள் பலருக்கு விருப்பமான பாடலாக இருக்கும் 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடலை பாடியவர். இவர் பாடும்போது வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் அத்தனை தெளிவாக இருக்கும். ஹைபிட்ச் பாடல்களை இவர் பாடும் விதம் அருமையாக இருக்கும்.ஏனோ இவர் பெரிதாக அங்கீகரிக்கப் படவில்லை என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகர் இசையில் புதையல் படத்தில் 'பூத்திருக்கும் மனமே' பாடலை பாடினார்.இவர் கடைசியாக திருப்பாச்சி படத்தில் வரும் 'கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு' பாடலை பாடியிருக்கிறார்.

இவர் பாடிய பாடல்கள் சில:

பூங்கதவே தாழ்திறவாய் - நிழல்கள்
ஆனந்த ராகம்-பன்னீர் புஷ்பங்கள்
பொன்மானே கோபம் ஏனோ-ஒரு கைதியின் டைரி
கஸ்தூரி மானே கல்யாண தேனே-புதுமைப் பெண்
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு- மெல்ல பேசுங்கள்
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - தென்றலே என்னை தொடு
ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை
நீ பாதி நான் பாதி கண்ணா - கேளடி கண்மணி

பி.எஸ்.சசிரேகா:
மெல்லிசை மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவரின் திறமைக்கு, இளையராஜாவின் இசையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இவர் பாடிய 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' பாடல் ஒரு சோறு பதம்.ஒரு காலத்தில் இசையமைப்பாளர்கள் மனோஜ் கியான் இசையில் வெளிவந்த படங்களில் தொடர்ச்சியாக பல பாடல்களை பாடிய இவர் கடைசியாக திரையில் பாடியது கிழக்குச் சீமை படத்தில். சிறிது நாட்களுக்கு முன் எஸ்.பி.பியுடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றபோது எஸ்.பி.பி இவரிடம் இப்போ உள்ள சில பாடகிகளை ஒப்பிடும்போது உன்னோட திறமைக்கு உனக்கு இன்னும் குறைந்தது 500 பாடல்களாவது பாடும் வாய்ப்பு வந்திருக்கணும் என்றதைக் கேட்டதும் மெலிதாக சிரித்தார் இருந்தாலும் அந்த சிரிப்பில் உரிய அங்கிகாரம் கிடைக்காத வேதனையே தெரிந்தது.இன்னும் அதே குரல்வளத்தோடு பாடுகிறார்.தற்போது மேடை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருக்கிறார்.

இவரின் பாடல்கள் சில:

செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்தவா - செந்தூரப் பூவே
மாமரத்து பூவெடுத்து,ராத்திரி நேரத்து பூஜையில் - ஊமை விழிகள்
இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி - உயிருள்ளவரை உஷா
வரகு சம்பா முளைக்கலே - உழவன் மகன்

எஸ்.பி.ஷைலஜா:
எஸ்.பி.பியின் தங்கையான இவர் எண்பதுகளின் மத்தியில் இளையராஜாவின் இசையில் பல வெற்றி பாடல்களை பாடியவர். மெலடி மற்றும் குத்து இரண்டுக்குமே மிகப் பிரமாதமாக பொருந்தக் கூடிய வளமான குரலுக்குச் சொந்தக்காரர்.இவர் தனது அண்ணனோடு இணைந்து நிறைய டூயட் பாடல்களை பாடியிருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மாநகரக் காவல் படத்தில் வரும் 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர' பாடலைச் சொல்லலாம்.

இவரின் பாடல்கள் சில:

சோலைக் குயிலே - பொண்ணு ஊருக்கு புதுசு
ராசாவே உன்னத்தான் எண்ணித்தான் - தனிக்காட்டு ராஜா
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி
மாமன் மச்சான் - முரட்டுக் காளை
கட்ட வண்டி கட்ட வண்டி - சகலகலா வல்லவன்
சுனந்தா:

இந்த பதிவை பற்றிய சிந்தனைக்கு காரணமாய் இருந்தவர்.ரொம்ப பிரபலமான பாடல்களை பாடியிருந்தும் அதிகமாய் அறியப்படாத பாடகி. இவரது குரல் மெலடி பாடல்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும், குறிப்பாக தாலாட்டுப் பாடல்கள்.இவர் பாடிய பெரும்பாலான டூயட் பாடல்கள் ஜெயச்சந்திரன் அவர்களோடுதான். இளையராஜாவைத் தொடர்ந்து தேவா இசையிலும் பல தாலாட்டுப் பாடல்களை பாடியிருக்கிறார்.

இவரின் பாடல்கள் சில:

காதல் மயக்கம் - புதுமைப் பெண்
பூ முடித்து பொட்டு வைத்த - என் புருஷன்தான் எ.மட்டும்தான்.
ஆனந்தம் பொங்கிட பொங்கிட-சிறைப் பறவை
வெள்ள மனம் உள்ள மச்சான் - சின்ன வீடு
செண்பகமே செண்பகமே- எ.ஊ.பாட்டுக்காரன்
செம்மீனே செம்மீனே - செவ்வந்தி
மன்னவா மன்னவா - வால்டர் வெற்றிவேல்
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே - உழைப்பாளி


மின்மினி:

ஒரே நேரத்தில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொடர்ந்து பல படங்களுக்கு பாடல் பாடும் வாய்ப்பை பெற்றவர்.ரோஜாவில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை'க்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகி விருதைப் பெற்றவர்.ரொம்பவும் பிஸியாக இருந்த நேரத்தில் குரலில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு பேசக்கூட முடியாத நிலையில் இசைத்துறையைவிட்டு எதிர்பாராமல் விலக நேர்ந்தது சோகம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் மீண்டும் பாடும் வாய்ப்பை பெற்றார்.அந்த பாடல் படத்தில் இருக்கிறதா என தெரியவில்லை.


இவர் பாடிய சில பாடல்கள்:

லவ்வுன்னா லவ்வு - மீரா
காற்றுப் பூவை பார்த்து - ஐ லவ் இண்டியா
மெதுவா தந்தியடிச்சானே - தாலாட்டு
மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி
பச்சை கிளி பாடும் ஊரு - கருத்தம்மா
பார்க்காதே பார்க்காதே - ஜென்டில் மேன்
சித்திரை நிலவு சேலையில் வந்தது - வண்டிச் சோலை சின்ராசு
சம்போ சம்போ - புதிய முகம்


அடுத்த பதிவில் பின்னணி பாடகர்களான தீபன் சக்கரவர்த்தி, எஸ்.என்.சுரேந்தர்,மனோ(??!!) இவர்களை பற்றி பார்ப்போம்.

No comments: