Tuesday, November 25, 2008

ஐந்து வழி மூன்று வாசல்................!

இலக்கியம் குறித்து பெரிதாக (சுத்தமாக) பரிச்சயம் இல்லாத எனக்கு,எது இலக்கியம் என்பது பற்றியும்,எந்த கட்டமைப்புக்குள் எழுதுவது இலக்கியகக் கட்டுரைகளாக பார்க்கப்படுகின்றன என்பது பற்றியும் சரியான புரிதல் இன்றுவரை இல்லை,இதற்கு சரியான வாசிப்பனுபவம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

சில படைப்புகளில் கையாளப்படும் சொற்கள் ஒரு புரியாத புதிராகவே உள்ளது,குறிப்பாக புனைவு,கயமை,பின்நவீனத்துவம்,படிமம் இப்படி,இவற்றில் சில சொற்களுக்கு பொருள் புரிவது போலவும், சமயங்களில் புரியாதமாதிரியும் இருக்கிறது.


கல்யாண்ஜி, வண்ணதாசன், பிரமிள், ஜி.நாகராஜன், அசோகமித்ரன், பிரபஞ்சன், நீல பத்மநாபன் இப்படியாக நீளும் இலக்கியவாதிகளின் பெயர்களை கேட்க நேரிடும்போது அவர்களின் படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.ஆனால் வெகு சாமாண்ய நடையில் எழுதப்படும் சில கவிதைகளையும், கட்டுரைகளையும் படிக்கும் போதே பாதி புரிவதில்லை அப்படியிருக்க இவர்களின் படைப்பு எனக்கு புரிந்துகொள்ள முடியுமா என கூடவே மற்றொரு எண்ணமும் தோன்றும்.

இலக்கியத்தைப் பற்றி அறிய ஆவலாக இருக்கும் எனக்கு யாரின் படைப்பிலிருந்து ஆரம்பித்தால் எளிதாக இருக்கும் என உங்களுக்கு தெரிந்த படைப்புகளை எனக்கு பரிந்துரை செய்வீர்களாக.

இப்போது தலைப்பிற்கு வருகிறேன்,இலக்கியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத காலத்தில் நான் வாசித்த புத்தகம்தான் "ஐந்து வழி மூன்று வாசல்" ஒரு சரித்திர நிகழ்வையும்,நிகழ்கால நிகழ்வு ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான த்ரில்லர் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி இறுதியில் இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி அற்புதமாக கதையை முடித்திருப்பார், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன். இந்த நாவலில் இடம்பெற்ற ராஜேந்திரன்,மீனாட்சி, ஜம்னாலால் ஆகிய காதாபாத்திரங்கள் படித்து பல வருடங்கள் ஆனபின்பும் இன்னும் மனதைவிட்டு அகலாதவை.

இந்த புத்தகம் படித்த ஆர்வத்தால் அடுத்து நான் படித்தது கல்கியின் "பொன்னியின் செல்வன்",வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்" மற்றும் "கி.ராஜநாராயனின் கதைகள்" என சொற்ப எண்ணிக்கையிலேயே அடக்கிவிடலாம்.

டிஸ்கி:ரொம்ப ஆர்வக் கோளாரில் இருக்கும் எனக்கு நல்ல படைப்புகளை அறிமுகப் படுத்துங்கள் என்பதற்காகவே இந்த பதிவு.

No comments: