சொப்பன சங்கமம்:
பூவாச கூந்தலின் கிறக்கத்தில்
விழித்துக்கொண்ட ஆண்மை,
உச்சிமுகர்ந்து காதுமடல் வருடி,
உதிரமதிர அதரங்கள் சுவைத்து,
சில வளைவு நெளிவுகள் கடந்து
எல்லாம் முடித்(ந்)து களைத்து,
உறங்கி விழிக்கையில்,
எஞ்சியிருக்கும் கலவிச் சோம்பல்
மெல்ல விளங்கவைக்கும்
நேற்றிரவின் சொப்பன சங்கமத்தை,
அனைத்தும் புரிந்த கணத்தில்
அங்கதமாய் கைக்கொட்டிச் சிரிக்கும்
வேறுவழியில்லாத பிரம்மச்சரியம்..!
மோகம் :
வைகறை பொழுதிலே
மெல்ல வீசும் மந்த மாருதம்,
அறையில் பரவும் இளம் வெளிச்சம்,
தூரத்து ஒற்றைக் குயிலோசை,
உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்,
எழலாமென நினைத்திருப்பேன்;
வேண்டாமென வெல்லும் சோம்பல் ,
எனது நெஞ்சில் பதிந்திருக்கும்
உனது நேற்றைய கூந்தல் பூ,
பூவை எடுத்து ரசித்திருப்பேன்
எதிரே தேனீர் கோப்பையோடு
வெட்கப்பட்டு நின்றிருப்பாய்,
உன் ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும் மோகம்..!
ஒரு கணிப்பொறியாளனின் கனவு:
ஒரு விடுமுறை நாளின்
மதியநேர தூக்கத்தில்,
செண்ணிற புரவியில்
வெண்ணிற ஆடையணிந்த
தேவதையொருத்தி வந்தாள்,
மெல்ல என் கரம் பற்றி,
எங்கோ மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி அமைத்த
ஒரு மஞ்சத்தில் இருத்தினாள்,
அப்போதுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதமென்று
தாவி அணைக்க முயல்கையில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்தால்,
நண்பனின் ஜாவா சந்தேகம்,
சந்தேகம் தீர்த்து
மீண்டும் கனவை
தொடர முயற்சித்தேன்,
முடியவில்லை-
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது..!
(சென்ற ஆண்டு ஆகஸ்ட் பூங்கா இதழில் தேர்வாகியிருந்த கவிதை.)
முன்னாடி ரொம்ப பெருசா இருந்த இந்த கவிதையை முடிஞ்ச மட்டும் சுருக்கிட்டேன்,சுருக்கினதே இவ்வளோ பெருசா இருக்கு :)
டிஸ்கி : இவை ஏற்கனவே எழுதிய கவிதைகள்தான்,ஒரு மீள் பார்வைக்காக.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment