Sunday, December 23, 2007

நிலவைக் காணவில்லை!!

நிலவே!
நீ முழுதாய்த் தெரிந்தால்
காதலியின் முகத்துக்கும்,
பாதியாய்த் தெரிந்தால் இதழுக்கும்,
அதிலும் பாதியாய்த் தெரிந்தால்
புருவத்துக்கு ஒப்பிடுகிறார்கள்,
உனக்குப் புகழ்ச்சியே
பிடிக்காது போலும்
அதனால்தான்
முகம் காட்ட மறுக்கிறாயோ!!!
********************
என்ன குற்றம் செய்தாளென்று
தலைமறைவாகிப் போனாள்
நிலாப் பெண்!!!
*******************
வானத்தில் ஹோலி
யார் வீசியது கருப்புச் சாயத்தை
நிலாப் பெண்மீது!!!
********************
எந்த காதலனோடு
இரவோடு இரவாக
ஓடிப் போனாள்
நிலாப் பெண்!!!!
*******************
ஏய் நிலவே!
நீ இருந்தாலும்
இவ்வளவு கல்நெஞ்சக் காரியா?
உன்னை காட்டித்தானே
என் குழந்தைக்கு சோறூட்டுவேன்
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
எங்கே போனாய்?!
*****************
பகலெல்லாம் என் காதலன்
கொடுத்த வெளிச்சத்தில்
எதைச் சாதித்தீர்கள்
என்றெண்ணித் தானோ என்னவோ
சும்மாவே இருந்து விட்டாய்!!!
******************
நீ, நல்ல பெண்தான்,
ஆனாலும் சமயங்களில்
பகலிலும் தெரிவாய்,
இப்படி நேரம் கெட்ட நேரத்தில்
வெளியே வரலாமா?-ஒரு வேளை
உன் சூரியக் காதலனை
உளவு பார்க்க வந்து,
அதனால் அவன் கோபத்திற்கு ஆளாகி
பொசுங்கி போயிருப்பாயோ!!!
***************
ஏய் நிலவே!
எனக்கு உதவி செய்ய
மறைந்து கொண்டாயா?-இல்லை
என் தொழிலைக் காணச் சகிக்காமல்
முகம் மூடிக் கொண்டாயா
புரியாமல்த் தவித்தது
திருட்டுப் பய மனசு!!!

ஆம், இன்று அமாவாசை!!!

Monday, December 10, 2007

சங்கு சுட்டாலும்...... !!

அரைமணி நேரமா நின்னுகிட்டு இருக்கேன்,எப்போ பாரு நாம வர்றப்போ மட்டுதான் இந்த பஸ் நேரத்துக்கு வராம இம்சையை கொடுக்கும், உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது,வழிந்த வியர்வையைத் துடைத்தபடியே பஸ் வருதா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்,யாரோ சட்டையைப் பிடித்து இழுப்பது போல் உணர்ந்துத் திரும்பினேன்.

"அய்யா... தர்மம் பண்ணுங்க சாமி.."-தட்டை ஏந்தியபடி பிச்சையெடுக்கும் கிழவி.

"ஏய் சில்லறை இல்ல போ அங்கிட்டு" என்று என் காத்திருத்தலின் எரிச்சலை அவளிடம் காட்டினேன்.

போவேனா என்பது போல் நகராமல் கெஞ்சிக் கொண்டிருந்தாள் கிழவி.

"இருக்கிற எரிச்சலில் இது வேற" முணுமுணுத்தபடியே சட்டைப் பையில் இருந்த நூறு ரூபாய்,ஐம்பது ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பையைத் துழாவினேன் இருந்த சில்லறைக் காசில் தேடிப் பிடித்து ஒரு ஐம்பது காசை எடுத்துத் தட்டில் போட்டேன்,

ஒரு பெரிய கும்பிடுப் போட்டு கிழவி நகர்ந்தாள்,

திடீரெனெ நான் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கு எதிரே கல்லூரி மாணவர்களும்,ஆசிரியர்கள் சிலரும் ஒன்று கூடினர்,அவர்களின் கையில் வெள்ள நிவாரண நிதி என்று எழுதிய கைத்தட்டியை வைத்திருந்தனர்.

ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் பெய்த மழைவெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுகளையும், அதனால் பாதிக்கப் பட்ட மக்களின் அல்லல்களையும் உருக்கமாக எடுத்துக்கூறி, இறுதியாக "எங்கள் மாணவர்கள் உங்களிடம் உண்டியல் ஏந்தி வருவார்கள் தாங்கள்,தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் நாலாப் பக்கமும் உண்டியலை ஏந்திச் சென்று கொண்டிருந்தனர், நான் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கும் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.

"இவங்களுக்கெல்லாம் வேற வேலை இல்ல" என்று நினைத்தபடியே பஸ் வருதாவெனப் பார்த்துக் கொண்டிருந்தேன்,

எங்க ஊர் பஸ்ஸைத் தவிர மற்ற அனைத்துப் பஸ்ஸும் வந்து போய்க்கொண்டிருந்தது.

அதற்குள் உண்டியல் ஏந்திய மாணவன் என்னை மிக நெருங்கிவிட்டான், என்னிடம் வருவதற்குள் பஸ் வந்து விட வேண்டுமென்று படபடப்போடு நான்.

"சனிய புடிச்ச வண்டி" இன்னும் வரல,

மாணவன் என்னை நெருங்க நெருங்க, முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டேன்,அப்படியே என்னிடம் கேட்டாலும் "இல்லையென சொல்லிட வேண்டியதுதான் " என நினைத்தபடியே நின்றுகொண்டிருந்தேன்.

"தம்பி" என யாரோ கூப்பிடுவதைப் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்,சற்று முன் என்னிடம் பிச்சை கேட்ட கிழவி,அந்த மாணவனைக் கூப்பிட்டு தன் தட்டில் உள்ள சில்லறையெல்லாம் அந்த உண்டியலில் போட்டுக் கொண்டிருந்தாள்".

"யாரோ என் முகத்தில் காரி உமிழ்ந்தது போல் இருந்தது!".


(சர்வேசனின் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய சிறுகதை,இது எனது முதல் முயற்சி,குறையிருப்பின் பின்னூட்டத்தில் கூறுங்கள்,திருத்திக் கொள்கிறேன்.)

Monday, December 3, 2007

காதல் சாலை!!!

அது ஒரு மழைக்காலம்,
மழை நின்ற ஒரு இடைவெளியில்
நீ பள்ளி செல்ல ஆயத்தமாய்
வீட்டை விட்டு வெளியே வருகிறாய்,
உன் வீட்டிற்கும்,சாலைக்கும்
இடைப்பட்ட தூரத்தில்
தேங்கி நின்ற மழை நீரில்
கால் படாமல் இருக்க
கற்களை வைத்திருந்தார்கள்,
நீ ஒரு கல் விட்டு ஒரு கல்
தாண்டிய படியே வருகிறாய்,
உன் பாதம் படாத கற்களின்;
ஏக்கம் உனக்குத் தெரியுமா?!

பிறகு உன் தோழியர் கூட்டத்தோடு
இணைந்து பயணத்தைத் தொடர்கிறாய்,
எல்லோரும் ஒரே மாதிரியான சீருடைதான்
அணிந்து செல்கிறீர்கள்;
ஆனாலும் நீ தனித்துத் தெரிகிறாய்!!,

என்ன நினைத்தாயோ தெரியவில்லை,
திடீரென ஓடி,
ஒரு மரத்தின் கீழே நின்று
அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்,
தோழியரும் ஆர்வமாய் ஓடி வந்து
என்னவென்று வினவியபடியே
அண்ணார்ந்து பார்க்கையில்,
யாரும் அறியாமல்
தணிந்திருந்த ஒரு
கிளையை பிடித்து உலுக்குகிறாய்,
இலையில் தங்கிய மழை நீர்
தோழியரை நனைக்க,
அவர்கள் பொய் கோபத்தோடு உன்னைத் துரத்த
நீ முன்னே ஓடுகிறாய்,
என்ன தவம் செய்தது சாலை!!

நீ உலுக்கிய கிளையை
எனக்கு நானே உலுக்கி
நனைந்து களித்து
உன்னைத் தொடர்கிறேன்,


அடுத்து எதிர்பட்ட
கால்வாய் மதகடிப் பாலத்தில்
ஒரு புறம் இறங்கி
காகிதக் கப்பலை விட்டு
மறுபுறம் ஓடி வந்து பார்க்கிறாய் ,
மறுபுறம் வெளிவந்தக் கப்பல்
அருகில் இருந்த சுழியில் மாட்டி,
நான் உன்னைச் சுற்றுவது போலவே
சுற்றுவதைப் பார்த்து,
ஆனந்தப்பட்டு துள்ளி குதிக்கிறாய்,

பள்ளியை நெருங்கிய சமயத்தில்
மீண்டும் தூரல் விழத்தொடங்க
எல்லோரும் அவசரமாய் குடை விரிக்கையில்,
நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,
அந்த கணத்திலிருந்து எனக்குக்
குடையே பிடிக்கவில்லை!!!

Tuesday, August 28, 2007

அழகு!!!

அச்சம்,மடம்,நாணம் போன்ற
பெண்ணுக்கே உரிய
எதுவும் இல்லை உன்னிடம்,
ஆனாலும் உன்னை எனக்குப்
பிடித்திருந்தது,
வீரம்,கல்வி,கொடை போன்ற
ஆண்மைக்கே உரிய
அத்தனையும் உண்டு என்னிடம்,
ஆனாலும் உனக்கு என்னைப்
பிடிக்கவில்லை,
நான் உன்னை நேசிக்கவும்
நீ என்னை வெறுக்கவும்
இருந்தக் காரணம் ஒன்றே- அழகு!!!

Saturday, August 25, 2007

காதல் ஊர்வலம்!!!

காகத்திற்கு
உணவு வைப்பத்தாய்க் கூறி
"கா..கா.கா...கா" என
விளித்துக் கொண்டே
ஓரக் கண்ணால்
என்னைப் பார்த்துச் சிரிப்பாய் ,
என் நிறத்தை வைத்து
நீ கேலி செய்கிறாய்
என்பது தெரிந்தும்
ரசிப்பேன்!!!!
*************************************
என்னைப் பார்க்கும்
போதெல்லாம் நவரசத்திலும்
இல்லாத ஒரு
பாவனை செய்வாய்
அந்த பத்தாவது ரசத்தின்
பெயர் என்ன?!!
***********************************
உன் வீட்டை
கடக்கும் போதெல்லாம்
உன் குடும்பத்தாருடன் தான் இருப்பாய்
ஆனாலும் யாரும் அறியாமல்
சொல்ல வேண்டியதை
சொல்லி விடுகிறாயே
கள்ளி!
எங்கேயடி கற்றாய்
அந்த வித்தையை?!
********************************

"சுற்றுலாவில் நான் ரசித்தவை"
என்ற தலைப்பில்,
கட்டுரை எழுதச் சொன்னார்கள்
பக்கம் பக்கமாக எழுதினேன்
உன் பெயரை மட்டும்!!!!

Thursday, August 23, 2007

கவிதை வேண்டாமடி!!!

காதலைச் சொல்லக்
கவிதை வேண்டுமாம்,
எழுதிப் பார்த்தேன்
கவிதை வரவில்லை
காகிதக் குப்பைதான் வந்தது,
என் காதலின் ஆழம் புரிய
கவிதை வேண்டாமடி
கசக்கிப் போட்ட
காகிதங்களைப் பார் !!!!

Tuesday, August 21, 2007

ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!

ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்,
செண்ணிறப் புரவியில்
வெண்ணிற ஆடை அணிந்த
ஒரு தேவதை வந்தாள்,
மெல்ல என் கரம் பற்றி
வா என்றாள்,
எங்கே என்றேன்,
சொன்னால்தான் வருவாயோ?-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள் ,
எதற்காக என்னை
இங்கே அழைத்து வந்தாய்-என்றேன்,
இன்னுமாப் புரியவில்லை என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கையில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்,
சந்தேகம் தீர்த்து முடிக்கையில் ;
மீண்டும் கனவின் நினைவு வர
விட்ட இடத்திலிருந்துக்
கனவைத் தொடர முயற்சித்தேன் ,
முடியவில்லை ;
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது!!!

Monday, August 20, 2007

காவேரிக் கரையோரம்!!!

(2003-2004 ம் ஆண்டு தஞ்சைப் பகுதியில் நிலவிய வறட்சியால் விவசாயிகளின் துயர் கண்டு எழுதியது)
அன்று

பயிர்களின் அறுவடையால்
நிறைந்தன தாழிகள்
இன்று
உயிர்களின் அறுவடையால்
அறுந்தன தாலிகள்!!
*********************************************

அன்று
உணவிற்காகக் கொடுத்தோம்
பலருக்கு
அடைக்கலம்
இன்று
உணவிற்காகப்
பட்டக் கடனை
எப்படி
அடைக்கலாம்!!
************************************************

அன்று
வேளைக்கு உணவு
இன்று
உணவிற்கு வேலை!!
************************************************

அடுத்த வேளை கஞ்சிக்கு
அண்ணார்ந்துப் பார்த்த
குழந்தையிடம்
"மழை வேண்டி மாரியாத்தாளுக்கு விரதம்
ஒரு வேளைதான்சாப்பிடோனும்"
இல்லாமையால்
சொன்னாள் தாய்!!!
*************************************************
குறிஞ்சியும் ,முல்லையும்
பூத்துக் குலுங்கிய
இந்த மருத நிலத்தில்தான்
பட்டு நெய்தலும்
சிறப்புற்று விளங்கியது
ஆனால் இன்றோ
காவிரி கைவிரித்ததால்

ஆனது பாலை!!!!

Sunday, August 19, 2007

இது காதல் காலமடி!!!(பகுதி 3)

ஆளே இல்லாத சாலையிலும்
அனிச்சையாய் எழுப்பினேன்
மிதிவண்டி ஒலியை
அருகே உன் வீடு!!
************************************
கோலமிட்டுச் சற்றுத்

தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது!!
*************************************
நிறைகுடமும் கூத்தாடும்

நீ சுமந்து வருகையில்!!!
*************************************
உன்னைப்

பார்த்துக்கொண்டே வந்ததில்
எதிரே இருந்த கல்லில்
இடரி விழப் போன என்னிடம்
பார்த்து வாங்க என்கிறாய்!!

Friday, August 17, 2007

சந்தர்ப்பங்களில்.....!!!

தீடீர் மழை,
நனைய ஆசை,
ஓடி ஒதுங்கும் மக்கள்;
சேர்ந்து ஒதுங்குகிறேன் ,
சந்தர்ப்பங்களில்
நடிக்கத்தானே வேண்டியுள்ளது..!!!!

Thursday, August 16, 2007

இது காதல் காலமடி!!!(பகுதி 2)

அன்றொருநாள்
உன் தாவணி
மிதிவண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கொன்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் மனது
உன் தாவணியில் சிக்கியது!!

******************************************
உன் அக்காவின் திருமணத்தில்
உன் திருமணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!
*********************************************

உனக்குப் பிடித்தக்
கவிஞர் யார் என்றாய்,
உன் அப்பா என்றேன்
புரியாமல்ப் பார்த்து
பிறகு
வெட்கப்பட்டுச் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?!!

**********************************************
நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மாவிற்கு
நீர் இறைத்துத் தந்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வேறு யாரேனும் கேட்டிருந்தால்
நீர் இறைத்துத் தருவாயா?!!!!!
******************************************
உன் வீட்டில்
எறும்புத் தொல்லை
அதிகமென்று
சர்க்கரை டப்பாவைச் சுற்றி
பூச்சி மருந்தைத்
தூவி வைத்திருக்கிறாய்
எதற்கும்
நீ படுக்கும்
இடத்தைச் சுற்றியும்
அப்படியே செய்துவிடு!!!
************************************************

மோகம்!!!!

வைகறைப் பொழுதிலே
மெல்ல வீசும் மந்த மாருதம்,
அறையில் பரவும் இளம் வெளிச்சம்,
தூரத்து ஒற்றைக் குயிலோசை,
உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்,
எழலாமென நினைத்திருப்பேன்;
வேண்டாமென வெல்லும் சோம்பல் ,
எனது நெஞ்சில் பதிந்திருக்கும்
உனது நேற்றைய கூந்தல் பூ,
பூவை எடுத்து ரசித்திருப்பேன்
எதிரே தேனீர் கோப்பையோடு நீ
வெட்கப்பட்டு நின்றிருப்பாய்,
உன் ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும்
மோகம்!!!!!

இது காதல் காலமடி!!!!(பகுதி1)

கார்த்திகைப் பெருநாளன்று
தீபம் ஏற்றிக் கொண்டிருக்கிறாய் ,
ஏன் குனிந்து நிமிர்ந்து
இவ்வளவு சிரமப்படுகிறாய்
பேசாமல் நீயே வந்து
வாசலில் அமர்ந்து விடேன்!!!
(இதே போன்ற ஒரு கவிதை தபு சங்கரின் கவிதை தொகுப்பிலும் இருக்கிறது,இது எதார்த்தமாய் அமைந்ததா இல்லை அதை நான் முன் எங்கேயாவது படித்து அதன் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.)
*******************************************
பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்

நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்
உண்மையைச் சொல்
என்றைக்காவது நாடகத்தைப்
பார்த்திருக்கிறாயா?!
*******************************************
நாம் காதலிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்
நீ என்னைக் கடந்து போகயில்
எல்லோரும்
என்னையேப் பார்க்கிறார்கள்!!
**********************************************
உன் வயதை
நான் மட்டும்
தானேக் கேட்டேன்
இன்று முதன் முதலாக
ஓட்டு போட வந்து
ஊருக்கேச் சொல்லி விட்டாயே!!!!

பசி!!

நெருங்கிய உறவில் மரணம்
நெஞ்சமெல்லாம் துயர்
அவசரகதியில்
ரயில் பிடித்து அமர்கயில்
"சார்" டிபன்
எங்கிருந்தோ வந்த குரலில்
அத்தனையும் மறந்தேன்
பசி!!!

கனவு!!

ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்
சென்னிறப் புரவியில்
வெண்ணிற ஆடை அணிந்த
ஒரு தேவதை வந்தாள்
மெல்ல என் கரம் பற்றி
வா என்றாள்,
எங்கே என்றேன்,
சொன்னால்தான் வருவாயோ?-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள்
எதற்காக என்னை
இங்கே அழைத்து வந்தாய்-என்றேன்,
இன்னுமாப் புரியவில்லை என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்
விரகத்தில் தவித்த உதடுகளையும்
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கயில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்
சந்தேகம் தீர்த்து முடிக்கையில்
மீண்டும் கனவின் நினைவு வர
விட்ட இடத்திலிருந்துக்
கனவைத் தொடர முயற்சித்தேன்
முடியவில்லை
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது!!!!