Monday, December 29, 2008

இசைப்பிரியர்களுக்கு ஒரு சவால்...!

பொதுவாக நம்மில் பலர் இசை பிரியர்களாக இருப்போம்,ஆனாலும் ஒரு பாடலில் முதல் நான்கு வரிகளை தாண்டி பெரும்பாலும் கவனித்திருக்க மாட்டோம்.அதனால் பாடலின் இடையே வரும் ரசிக்கப்படபட வேண்டிய சில வரிகள் கவனிக்க படாமலேயே போயிருக்கும். எனக்கு பிடித்த திரைப் பாடல்களில் நான் ரசித்த சில வரிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். முடிந்தால் அந்த பாடல்களின் முதல் வரிகளை கண்டுபிடியுங்கள். (சின்னபுள்ளத்தனமாவுல்ல இருக்குன்னெல்லாம் சொல்லாம சமத்தா பதில் சொல்லுங்க மக்கா).

"நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை
நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்த பொழுதை"


"எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?"

"உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்க்கவில்லை
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை"

"அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை"


"காதல் என்ற சொல்லில் காமம் கொஞ்சம் உண்டு
இடையில் சின்ன கோடு அட அதுதான் ரொம்பப்பாடு"(பெரும்பாடு)

"ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே"

"காதல்வழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை"

"அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்து
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்"


"பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா"


"உன்னை செய்த பிரம்மனே
உன்னை பார்த்து ஏங்குவான்".


இப்போதைக்கு இந்த பத்து பாடல்கள் போதும்,அடுத்தடுத பதிவுகளில் இன்னும் நிறைய வரிகளை பார்க்கலாம்.

கொசுறு:காதல் பாடல்கள் கொஞ்சம் அதிகமா இருக்குல்ல அது நம்மை அறியாம வர்ர விஷயம்.

:)

விடைகள்:

1.அந்த உச்சிமலை
காட்டக்கேளு பிச்சுமணி
பேரச்சொல்லும் -- எங்க தம்பி

2.சாதிமல்லி பூச்சரமே --- அழகன் --புலமைபித்தன்

3.ஒரு காதல் என்பது
என் நெஞ்சில் உள்ளது -- சின்னதம்பி பெரிய தம்பி

4.வானமழை போலே
புது பாடல்கள் -- இது நம்ம பூமி -- வாலி

5.காதல் இல்லாதது
ஒரு வாழ்க்கையாகுமா -- மணிரத்னம்

6.வா வா வா கண்ணா வா --- வேலைக்காரன் -- மு.மேத்தா

7.முத்தமிழே முத்தமிழே -- ராமன் அப்துல்லா -- அறிவுமதி

8.இளநெஞ்சே வா -- வண்ண வண்ண பூக்கள் -- வாலி

9.நினைத்து நினைத்து
பார்த்தேன் - - 7G ரெயின்போ காலனி - - ந.முத்துக்குமார்

10.அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே

பாடலாசிரியர் பெயர்கள் நினைவில் இருந்ததை மட்டும் எழுதியிருக்கேன், விடுபட்ட பாடல்களின் பாடலாசிரியர் தெரிந்தால் சொல்லிட்டு போங்க.

Sunday, December 28, 2008

மலையாள படங்களும்,பி.வாசுவும் பின்னே ஒரு அப்பாவி ரசிகனும்..!

1985லிருந்து 1995 வரை மலையாள சினிமாவின் பொற்காலம் என்பார்கள், அந்த காலகட்டத்தில் பத்மராஜன், பரதன், ஐ.வி.சசி, சிபிமலயில், பாசில், பிரியதர்ஷன் என பெரும் இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியான படங்கள்தான் இன்றளவும் மலையாள சினிமாவுக்கென்று ஒரு மரியாதையை சம்பாதித்து வைத்திருக்கிறதென்றால் மிகையில்லை.

நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்,தூவான தும்பிகள், தசரதம், தேவாசுரம், மணிசித்ரதாழு,பரதம், அமரம், ஒரு வடக்கன் வீர கதா என கணமான கதைகளை கொண்ட படங்களும்,கிலுக்கம்,சித்ரம், வந்தனம், வடக்கு நோக்கி எந்திரம்,நாடோடி காட்டு,அக்கரே அக்கரே போன்ற இன்றைக்கும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படங்களும், கோபால கிருஷ்ணன் எம்.ஏ,மிதுனம், வரவேழ்ப்பு, வெள்ளானக்கலுடே நாடு, போன்ற நடுத்தர குடும்பங்களின் பிரச்சனைகளை மிக எதார்த்தமாக அனுகிய படங்களும் இந்த காலக் கட்டத்திலேயே வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன.

தமிழில் இதே காலகட்டத்தின் பிற்பகுதியில் செந்தமிழ் பாட்டு,பாண்டித்துரை, வால்டர் வெற்றிவேல் என மிகவும் தரமான படங்களை(?!!) தந்து கொண்டிருந்தார் இயக்குனர் பி.வாசு.(இந்த படங்களெல்லாம் எப்படி வெற்றி படங்களாச்சுங்கிறது இன்றுவரை ஒரு புரியாத புதிர்தான்).வாசு சார் நீங்க ஒரு நல்ல ரசிகர் என்பது மணிசித்ரதாழு, பரதம், கத பறயும்போள் ஆகிய படங்களை தமிழில் கொண்டுவந்து நல்ல படங்களை எல்லோரும் ரசிக்க வேண்டுமென்கிற உங்க ஆர்வத்திலேயே தெரிகிறது,ஆனால் நீங்க என்ன செய்தீங்க?

மேற்சொன்ன மலையாள படங்கள் தமிழில் வெளிவந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததுண்டு,அந்த சமயத்தில் முதலில் உங்க பார்வை பதிந்தது "பரதம்"படத்தில்,இந்த படத்துக்காகத்தான் மோகன்லால் முதல் தேசிய விருதை பெற்றார்.அண்ணன் தம்பிக்கு இடையேயான ஈகோ பிரச்சினையை மிகவும் உணர்வு பூர்வமாக பேசிய இந்த படத்தில் மோகன்லாலும், நெடுமுடி வேணுவும் இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார்கள்.இந்த படத்தை பார்க்கும்போது அந்த குடும்பத்தில் நம்மையும் ஒரு நபராக உணரச் செய்யும்படி இருக்கும் இப்படத்தின் திரைக்கதை,ஆனால் தமிழிலில் நீங்களும்,கார்த்திக்கும் நல்லாவே மொக்கை போட்டிருப்பீர்கள்.(கார்த்திக் ஒரு நல்ல நடிகர் ஆனாலும் வாசு படத்தில் மோகன்லாலே நடித்தாலும் மொக்கை போட்டுதானே ஆகணும்.) படத்தை நீங்க ரீமேக் செய்யப் போகும் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தபோதே அந்த படத்தின் ரிசல்ட்டும் தெரிந்துவிட்டது, நான் நினைத்தைப் போன்றே உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ரணகளமாக்கி "சீனு" என்ற பெயரில் வெளியாகி அட்டர் ப்ளாப்பானது.பரதம் படத்தை இயக்கிய சிபி மலயில் சீனுவை பார்த்திருந்தால் கண்டிப்பாக ரூம் புக் பண்ணியிருப்பார்.

அத்தோடு விட்டீர்களா அடுத்தது பாசிலின் மணிச்சித்தரதாழு,மதுமுட்டம் அவர்கள் எழுதிய இந்த கதையை பாசில் அவர்கள் ரொம்ப கவனமாக கையாண்டிருப்பார்,கொஞ்சம் பிசகினாலும் காமெடியாகிவிடக் கூடிய அபாயம் உள்ள ஸ்கிரிப்ட்,split personality என்னும் ஒருவகை மனச்சிதைவு நோயால் பாதிக்கபட்ட பெண்ணாக ஷோபனா இயல்பாக நடித்திருப்பார், ஆனால் உங்க சந்திரமுகியில் ஜோதிகா நன்றாக நடித்திருப்பதாக பலரும் கூறினார்கள், நானும் ஒத்துக்கொள்கிறேன் என்ன ஒன்னு ஷோபனா Split personality என்ற ஒரே ஒரு நோயால் பாதிக்க பட்டவராய் நடித்திருப்பார், ஜோதிகாவோ மல்டிபிள் டிசீஸ் உள்ளவரை போல் நடித்திருப்பார். இந்த படத்தின் ஆரம்ப காட்சிகளில் ரஜினி,நயந்தாரா மற்றும் விஜயகுமாரின் காதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் அச்சு அசலாக ஆறாம் தம்புரான் படத்திலிருந்து உருவப்பட்டது. "அத்திந்தோம்"பாடலுக்கான காட்சியும் அப்படியே. கிட்டதட்ட சந்ரமுகியின் முதல் பாதி ஆறாம் தம்புரான்,இரண்டாம் பாதி மணிச்சித்ரதாழு. ஒரு சீரியசான படத்தை செம்ம காமெடியாக்கும் வித்தை உங்களுக்கு ரொம்ப இயல்பா கைவருது வாசு சார்,ஹாட்ஸ் ஆப் டூ யூ. இந்த கதையை உங்க சொந்த ஸ்க்ரிப்ட்ன்னு சொல்லி உச்சபட்ச காமெடியெலாம் வேற பண்ணீங்க. இந்த ஸ்டேட்மெண்டை கேட்ட மதுமுட்டம் எந்த சுவத்துல முட்டிகிட்டாரோ.

கதபறயும் போள் படத்தை குசேலனாக்கி குதறிய கதையை ஏற்கனவே வலையுலகில் பலமுனைத் தாக்குதல் நடந்திருப்பதால் நான் வேறு தனியாச் சொல்ல வேண்டியதில்லை,மலையாள படங்களின் ரசிகரான சுந்தர்.சி உங்களை போன்று ஒரு முழுபடத்தையும் ரீமேக் செய்வதில்லை,மாறாக பல வெற்றி படங்களிலிருந்து ஒவ்வொரு சீனாக உருவி ஒரு புது படத்தையே ரசிக்கும்படி கொடுத்துவிடுவார்.உதாரணமாய் "உள்ளத்தை அள்ளித்தா".பழைய சாபாஷ் மீனா வில் தொடங்கி கிலுக்கம்,வந்தனம், சித்ரம் ஆகிய படங்களிலிருந்தெல்லாம் காட்சிகளை சுட்டு அதை இன்னும் மெருகேற்றி ரசிகர்களின் உள்ளத்தை அள்ளினார்.உங்களால முடிஞ்சா அந்த மாதிரி செய்யுங்க, வேண்டாம் வேண்டாம் பேசாம நீங்க நடிக்கிறதையே கண்டினியூ பண்ணுங்க சார்.அதைக்கூட பார்த்துடலாம்.ஆனா மறுபடியும் நீங்க .... சரி வேண்டாம் இத்தோட நிறுத்திக்கிறேன்.

நேத்து இரண்டாவது முறையாக "தசரதம்" படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது,இந்த மாதிரி நல்ல படங்களை பார்க்கும்போது கூடவே ஐயையோ எங்கே வாசுவின் பார்வை இந்த மாதிரி படத்தின் மேலெல்லாம் பட்டுவிடுமோன்னு பயமாகவும் இருக்கிறது. நான் நடைவண்டியில் நடை பழகிய காலத்தில் வெளிவந்த "பன்னீர் புஷ்பங்கள்" என்ற அருமையான படத்தை தந்த நீங்க அதன் பிறகு எதாவது ஒரு நல்ல படம் கொடுத்துடுவீங்கன்னு ஒவ்வொரு முறையும் நானும் எமார்ந்ததுதான் மிச்சம் இப்போ எனக்கு தலைமுடியெல்லாம் நரைக்க ஆரம்பிச்சிடுச்சு, என்னாலேயே முடியல அடுத்த ஜெனரேஷன் பசங்க பாவம் சார். எனவே வாசு சாரிடம் நான் வைக்கும் ஹம்பிள் ரிக்வெஸ்ட் இதுதான் தயவு செய்து இனிமேல் நீங்க நடிக்கிறத மட்டும் கண்ட்டினியூ பண்ணுங்க சார்.

கொசுறு 1:லவ் பேட்ஸ் திரைப்படம் வெளிவந்த போது ரசிகர்கள் அடித்த கமெண்ட்,"ஒரு வாசு டைரக்ட் பண்ணாலே தாங்காது,இது நூறு வாசு சேர்ந்து இயக்கிய படம்டோய்". :)

கொசுறு 2:உங்க இயக்கத்தில் வெளியாகி சரியாக போகாத "இது நம்ம பூமி" படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது என்பதையும் நான் இங்கே சொல்லிக்கிறேன்.

Friday, December 26, 2008

மண்வாசனை பாட்டிகள்........!

பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் காந்திமதி அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை போல எப்போதும் கேலியும்,கிண்டலும்,சிலேடை பேச்சுமாய் அதகளம் செய்கிற பாட்டிகள் கிராமங்களில் ஊருக்கு ஒன்றிரண்டு பேராவது இருப்பார்கள்.எங்க ஊர்லகூட இப்படி நாலஞ்சு பா(ர்)ட்டிகளுண்டு,அதில் ஒரு பாட்டியின் தனிச்சிறப்புகளத்தான் இங்கே பகிர்ந்துக்க போறேன்.

ஒரு நாள் வண்டிமாடு கட்டுத்தறியைவிட்டு அவிழ்த்துக் கொண்டு நின்றதைப் பார்த்த நம்ம கதையின் நாயகி பாட்டி தனது கணவரை அழைத்து மாட்டை பிடித்து கட்டுமாறு சொன்னதற்கு,படுத்திருந்த தாத்தாவோ,"ஏண்டி நீ அங்கேதானே நிக்கிற நீயே புடிச்சு கட்டிடு" என்றார்.இதற்கு பாட்டி ரொம்ப கேஷுவலாக தாத்தாவிடம் சொன்னார்,"நீ கட்டியிருக்கற வேட்டிய அவுத்து கொடு அதை நான் கட்டிக்கிறேன்" என்றதும்,தாத்தா தலைதெறிக்க எழுந்து மாட்டைநோக்கி ஓடினார்.

அருகிலுள்ள கிராமத்திலிருந்து தாத்தாவின் அக்கா காலையிலேயே வந்துகொண்டிருந்தார்,இவர் மாததிற்கு குறைந்தது ஒரு முப்பது தடவையாவது பிறந்த வீட்டிற்கு வந்துவிடுவார் .இவரைக் கண்டாலே நம்ம பாட்டிக்கு ஆகாது,எனினும் அதை நேரடியாக காட்டிக்கொள்ளமாட்டார். அப்போது வீட்டின் வாசலில் கன்றுகுட்டி ஒன்று படுத்திருந்தது,அது கோவிலுக்காக நேர்ந்துவிடப்பட்ட கன்றுகுட்டி, இருப்பினும் தாய்ப் பசு பாட்டி வீட்டில் இருப்பதால் அந்த கன்றுகுட்டி வழக்கமாய் இங்கே வந்து படுத்துக்கொள்ளும்.நம்ம பாட்டி கன்றுகுட்டியையும்,விருந்தாளி பாட்டியையும் மாறி மாறி பார்த்தார்,அருகில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து படுத்திருந்த கன்று குட்டியை நோக்கி "சனியனே உன்னதான் முறையா சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்த்தாச்சுல்ல இன்னும் எதுக்கு இங்கே வந்து டேரா போடுற,சாவுற வரைக்குமா ஒனக்கு பொறந்த இடம் கேக்குது" என்று கன்றுகுட்டியை அடித்து விரட்டிவிட்டு அப்படியே கூலாக முகத்தை வைத்துக்கொண்டு,"வாங்க அண்ணி"என்று அக்கா பாட்டியை வறவேற்றார்.விருந்தாளி பாட்டியும் எல்லாம் புரிந்தாலும் "எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்க மாட்டோமா?"என்கிற ரேஞ்சில் எதையுமே கண்டுகொள்ளவில்லை.

பாட்டிக்கும்,அவரின் கணவரின் தம்பி மனைவிக்கும் இடையே ஏதோ பிரச்சனையில் நம்ம பாட்டியின் பிறந்த வீட்டைப் பற்றி சின்ன பாட்டி(தம்பி மனைவி) ஏதோ இழிவாக பேசிவிட்டார். பதிலுக்கு நம்ம பாட்டி எந்த வித ஆர்ப்பாட்டமின்றி ஒரே வார்த்தையில் அவரை கிளீன் போல்ட் ஆக்கினார்.அது என்னன்னு அப்படியே அவரின் வாசகத்திலேயெ சொல்கிறேன். "உன்னை பொண்ணு பாக்க வந்தப்போ உங்க அப்பன் வீட்டு வைக்க(வைக்கோல்) போர அண்ணார்ந்து பார்த்தேனா,அன்னைக்கு விழுந்த சுளுக்குதான் இன்னும் எடுபடல". இதை கேட்ட சின்ன பாட்டி கப்சிப்.காரணம் சின்ன பாட்டியின் டாடி வீட்டில்தான் நிலமே கிடையாதே,அப்படியிருக்க ஏது வைக்கோல் போர்(முன்னெல்லாம் கிராமத்தில் ஒருத்தர் எவ்வளவு பணக்காரர் என்பதை அறிய அவர் வீட்டு வைக்கோல் போரை பார்த்தால் தெரியுமென்பார்கள்).


இன்னொரு சுவையான சம்பவம்,பாட்டியின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் ஏதோ அவசர வேலையாய் வந்துவிட்டு உடனே வீடு திரும்ப எத்தணித்தபோது,பாட்டியின் மகன் உறவினரிடம்"இருங்கண்ணே காலையிலே போகலாம் ரொம்ப நேரமாச்சு" என்றதற்கு உறவினரோ,"இல்ல தம்பி நான் பஸ்ஸுல போயிடுறேன்" என்றதைக் கேட்ட பாட்டி,"ஏண்டா தம்பி,நீ பசுவுல போனது இருக்கட்டும் காளையிலே போகலாம்டா"என்று சிலேடையில் பேசி அசரடித்தார்.

குடிப்பழக்கத்தால் 60 வயதிலேயே தாத்தா கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த போது ஒரு நாள் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்துக்கொண்டிருந்தார்,அதை பார்த்த பாட்டி "என்னத்த பாக்குற குடிக்காதைய்யா குடிக்காதையா உடம்புல ஒன்னும் இல்லன்னு சொன்னப்பெல்லாம் பார்க்கல இப்போ என்னாத்துக்கு பாடி(body) பாக்குற,இனியா தேற போவுது" என்று அன்பை பொழிந்தார்.

கிட்டதட்ட அதே சமயத்தில் வங்கியில் தாத்தாபேரில் இருக்கும் ஏதோ கடனுக்காக அவரிடம் கையெழுத்து வாங்க வந்திருந்த அதிகாரிகள் தாத்தாவிடம்"பெரியவரே மெல்லமா பேங்க் வரைக்கும் வரமுடியுமா"என கேட்க நம்ம பாட்டி "மெல்லமா வரமுடியுமாவா? அவரு வேகமா போறத்துக்குள்ள இருக்காரு,இப்போ அவரு எங்கிட்டு வர்ரது" என்றதும் அதிகாரிகள் கொஞ்சம் பாட்டியை பார்த்து மிரண்டுதான் போனார்கள்.

ஒருமுறை ஏதோ சொத்து பிரச்சிணையில் பாட்டியின் மகன்மேல் ஒருத்தர் வழக்கு தொடர்ந்ததையடுத்து போலிஸ் பாட்டியின் மகனைத்தேடி வீட்டிற்கு வந்து பாட்டியிடம் "உன் மகன் எங்கே"யென விசாரித்து கொண்டிருந்தனர், நம்ம பாட்டி போலிஸாரிடமும் வழக்கம் போல் அகட விகடமாய் பேச,கடுப்பான போலிஸ்காரர் "ஏய் கிழவி ஓவரா பேசுன ஜீப்பிலே ஏத்திடுவேன்" என்று சொல்ல,அதற்கும் அசராத பாட்டி,"கொஞ்சம் இருய்யா நல்ல சேலையா கட்டிகிட்டு வறேன்,எனக்கும் ரொம்ப நாளா இந்த வண்டியில எல்லாம் ஏறி பார்க்கணும்னு ஆச" என்றதைத் தொடர்ந்து தெரிச்சு ஓடினார்கள் போலிஸ்.

கொசுறு:இங்கே சொன்னது பாட்டியின் சாகசங்களில் மிகவும் சொற்பமே.

Thursday, December 25, 2008

கவிதைக்கு காதல் வந்தால்......!

யாரும் அறியாமல்
பக்கத்து வீட்டு குழந்தையிடம்
"லாலிபாப்" வாங்கி சுவைக்கிறாய்,
எதிர்பாரா என் வருகையால்
சிறிது தடுமாறி,
இயல்பாய் முகத்தை வைக்க முயன்று
பிறகு வீட்டை நோக்கி ஓடுகிறாய்
வெட்கத்தை முதுகிலும் பரவவிட்டபடி..!


ஊரில் விளையாட்டு போட்டி,
ஓட்டப் பந்தயத்தில்
முதலாவதாக ஓடிவந்த
உனது அண்ணனை
நான் முந்தியபோது
உன்னையுமறியாமல்
துள்ளிக்குத்தித்து
மற்றவர்கள் முன்
அசடு வழிந்து நின்றாயே
நினைவிருக்கிறதா..!

என் தங்கை வீட்டில் இல்லாத
நேரமாய் பார்த்து,
அவளைப் பார்ப்பதற்கு வந்ததாக
அம்மாவிடம் சொல்லிக்கொண்டே
என்னை பார்த்து குறும்பாய் சிரிக்கிற
உன்னை என்ன செய்யலாம்....!


பொங்கலன்று
நடந்த கலைநிகழ்ச்சியில்
நடனம்,நாடகம்,கவிதையென
பல பிரிவுகளில் போட்டிவைத்து
யார்யாருக்கோ பரிசை வழங்கினார்கள்,
நீ நொடிக்கொருதரம் என்னை பார்த்து
பார்வையாலே வைத்த
ஜூகல்பந்தியை பாராமல்...!

எனது பிறந்தநாளுக்கு
நீ அனுப்பிய வாழ்த்து அட்டையை
போஸ்ட்மேனான உனது அப்பா
என்னிடம் கொடுத்தபோதே
எனக்கு அவரை 'மாமா'வாக்கிவிட்டாய்..!(
ஹி ஹி)

Monday, December 22, 2008

உங்களுக்கு காதல் பிடிக்குமா? அப்போ இங்கே வாங்க....!

வலையுலகிற்கு வந்த புதிதில் நான் எழுதிய இந்த காதல் கவிதைகளை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது அதற்கு வந்த எண்ணற்ற(பூஜ்ஜியம் எண் அற்றதுதானே) பின்னூட்டங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்,ஆனாலும் அதன் பிறகு நான் எழுதிய சுமாரான கவிதைகளுக்கெல்லாம் நிறைய பின்னூட்டங்கள் வந்ததைப் பார்த்தால்,ஒருவேளை நான் புதிய பதிவராக இருந்ததால் யாரும் வரவில்லையோ என்ற எண்ணம் வந்துச்சா அதுக்காண்டி இப்போ மறுக்கா அந்த கவிதைகளை ஞாபகப்படுத்துற மாதிரி இந்த பதிவு.

பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்
நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்,
உண்மையைச் சொல்,
என்றைக்காவது
நாடகத்தை பார்த்திருக்கிறாயா..?!


நாம் காதலிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
நீ என்னைக் கடந்து போகயில்
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!

உன் வயதை
நான் மட்டும் தானே கேட்டேன்,
இன்று முதன் முதலாக
ஓட்டு போட வந்து
ஊருக்கேச் சொல்லி விட்டாயே..!


அன்றொருநாள்
உன் தாவணி
மிதிவண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கொண்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் மனது
உன் தாவணியில் சிக்கியது...!


உன் அக்காவின் திருமணத்தில்
உன் திருமணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!



உனக்கு பிடித்த
கவிஞர் யார் என்றாய்,
உன் அப்பா என்றேன்
புரியாமல் பார்த்து
பிறகு வெட்கப்பட்டுச் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?!!


நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மாவிற்கு
நீர் இறைத்துத் தந்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வேறு யாரேனும் கேட்டிருந்தால்
நீர் இறைத்துத் தருவாயா..?!


உன் வீட்டில்
எறும்புத் தொல்லை
அதிகமென்று
சர்க்கரை டப்பாவைச் சுற்றி
பூச்சி மருந்தைத்
தூவி வைத்திருக்கிறாய்
எதற்கும்
நீ படுக்கும் இடத்தைச் சுற்றியும்
அப்படியே செய்துவிடு..!

ஆளே இல்லாத சாலையிலும்
அனிச்சையாய் அடிக்கிறேன்
சைக்கிள் பெல்லை
அருகே உன் வீடு...!



கோலமிட்டுச் சற்று
தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது...!


நிறைகுடமும் கூத்தாடும்
நீ சுமந்து வருகையில்..!


உன்னை பார்த்துக்

கொண்டே வந்ததில்
எதிரே இருந்த கல்லில்
இடரி விழப் போன என்னிடம்
பார்த்து வாங்க என்கிறாய்..!

அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!


இந்த கவிதைகள் பிடித்திருந்தால் ,தொடர்ச்சிக்கு இங்கே கிளிக்கவும் காதல் கவிதைகள் வாசித்துவிட்டு உங்க கருத்தையும் மறக்காமல் சொல்லிட்டு போங்க.

Friday, December 19, 2008

இந்த நடிகர்களை உங்களுக்கும் பிடிக்குமா?

பத்துபேரை ஒரே நேரத்தில் பந்தாடி புவி ஈர்ப்புவிசையையே கேள்விக் குறியாக்குவது,டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என கைடெசிபலில் கத்தி பஞ்ச் டயலாக் பேசி காதுகளை பஞ்சராக்குவது,அந்நிய நாட்டு தெருக்களில் அத்தனைபேர் பார்க்க கார்த்திகை மாத தெருவோர நன்றியுள்ள ஜீவன்களின் நடவடிக்கைகளையொத்த செயல்களில் டூயட் என்ற பெயரில் கதாநாயகிகளின் அங்கங்களை ஆராய்ச்சி செய்வது என சாகசங்கள் பலவும் செய்ய வேண்டியிராத, கேரக்டர் ஆர்டிஸ்ட் என்றழைக்கப்படும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பெரிதாக அங்கீகரிக்கப் படாமல் இருக்கும் சில சிறந்த தமிழ் நடிகர்களை பற்றி ஒரு நினைவூட்டல் இப்பதிவு.

வழக்கமாய் பிறமாநிலங்களில் இருந்து கதாநாயகிகளை இறக்குமதி செய்யும் தமிழ்சினிமாவில் இப்போதெல்லாம் வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரங்களுக்கும் பிறமாநில நடிகர்களை நடிக்க வைப்பது அதிகரித்திருக்கிறது.

கோட்டா சீனிவாசராவ்,ஆந்திராவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.தெலுங்கு "யாரடி நீ மோகினி"யில் தமிழில் ரகுவரன் ஏற்ற கதாபாத்திரத்தை இவர்தான் செய்திருப்பார். மிகவும் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார், அதே மாதிரி இன்னும் நிறைய படங்களில் தான் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிறுபித்திருப்பார். ஆனால் தமிழில் இவர் நடிக்கும்போது தெலுங்கு படம் பார்ப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தும்படிதான் இருக்கும் இவரது பாடிலாங்வேஜ்.ஆஷிஸ் வித்யார்த்தி ஒரு சிறந்த நடிகர் என்றபோதிலும் தமிழில் இவர் வசனங்களை உச்சரிக்கும்போது இவரின் வாயசைவு தமிழ் உச்சரிப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதை கவனிக்கலாம், நெடுமுடி வேணு இந்தியாவில் உள்ள மிக அற்புதமான நடிகர்களை பட்டியலிட்டால் முதல் பத்து இடங்களுக்குள் இவருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு, ஆனால் தமிழில் இவருக்கும், இன்னொரு மலையாள நடிகரான முரளிக்கும் நடிகர் ராஜேஷின் இரவல் குரல் தேவைபடுகிறது.

கலைக்கு மொழியில்லை என்பார்கள் ஆனால் மேற்சொன்ன இந்த நடிகர்களுக்கு மொழி காரணமாகவே தங்களது உண்மையான திறமையை இங்கே வெளிப்படுத்த முடியாமல் போகிறது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்,இப்படி பிறமாநில கலைஞர்களை வரவழைத்தும் வாழவைப்பது தமிழனின் பரந்த மனப்பாண்மையை காட்டினாலும் பிஸியாக இருக்கும் பிறமாநில நடிகர்களை தேடிப்போய் வாய்ப்பை வழங்கி அவர்களையும் கஷ்டப்படுத்தி, பார்க்கும் ரசிகனையும் கஷ்டபடுத்தும் நம் இயக்குனர்கள், குணச்சித்திர நடிப்பில் அற்புதமாக நடிக்கக் கூடிய சில தமிழ் நடிகர்கள், வாய்ப்புகள் இல்லாமலோ அல்லது சரியாக பயன்படுத்த படாமலோ இருப்பதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அந்த வகையில் சிறந்த தமிழ் நடிகர்களாக நான் நினைக்கும் சில நடிகர்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

டெல்லி கணேஷ்:

உலக நாயகன் கமலின் ஆஸ்த்தான நடிகர்களில் ஒருவரான இவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இவரின் முழுமையான திறமையை இன்னும் எந்த இயக்குனரும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றுதான் தோன்றுகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த "ஆஹா" படத்தில் காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பில் பின்னியெடுத்திருப்பார். கொஞ்ச காலங்களுக்கு முன் வாய்ப்புகளே இல்லாமல் இருந்தபோது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். அதில் ஒரு புது பாணி காமெடி நடிப்பை வழங்கி இப்போது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ராஜிவ்:

ஒரு கதாநாயகனுக்கு ஏற்ற வசீகரமான முகம் மற்றும் திறமை இருந்தும் இவர் நடிக்க வந்த காலகட்டத்தில் நான்கு நாயகர்களில் ஒருவர்,இரண்டாவது நாயகன்,வில்லன் என ஆரம்பித்த இவரது திரை வாழ்க்கை அடுத்தடுத்து பெரிதாக வாய்ப்பின்றி இரண்டு சீன்களில் தலைகாட்டும் துக்கடா ரோல்களில் நடிக்கத் தொடங்கி,"காதல் கோட்டை","ஜெயம்" என்று அவ்வப்போது சில படங்களில் நல்ல கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கேற்ப மிக இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர்.இவரிடம் எனக்கு பிடித்த மற்றுமொரு விஷயம் வளமான குரல் மற்றும் தமிழை உச்சரிக்கும் விதம்.

நிழல்கள் ரவி:

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுக படுத்தப்பட்ட இவரின் திற
மைக்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.1985 லிருந்து 1995 வரை வெளிவந்த பல படங்களில் கதாநாயகன்,வில்லன் எனத் தொடங்கி கிட்டத்தட்ட அனைத்துவிதமான கதாபாத்திரதிலும் நடித்திருக்கிறார்.விசுவின் இயக்கத்தில் வெளிவந்த"திருமதி ஒரு வெகுமதி" படத்தில் இவரின் நடிப்பு இவர் ஒரு மிகச் சிறந்த கலைஞன் என்பதற்கு ஒரு சோறு பதம்.இவரின் இன்னொரு சிறப்பு இயல்பாகவும் நடிப்பார்,ஓவர் ஆக்டிங்கிலும் வெளுத்து வாங்குவார்.கிட்டத்தட்ட அனைத்து முக்கியமான இயக்குனர்களின் படங்களிலும் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு.

ரஞ்சித்:

முன்னதாகக் குறிப்பிட்ட நடிகர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகரான இவரும் ஒரு சிறந்த நடிகர் என்பது என் எண்ணம். அறிமுகமான "சிந்து நதிப்பூ"படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார், தொடர்ந்து "பாரதிக் கண்ணம்மா" படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி"நேசம் புதுசு" படத்தின் மூலம் கதாநாயகனாக புரமோஷன் பெற்றார்.பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் பீஷ்மர் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்,படம் பத்திரிகைகளால் பாராட்டப்பட்டாலும் தோல்வியைத் தழுவியது இருப்பினும் இவர், வரும் நாட்களில் சிறந்ததொரு இயக்குனர் ஆவதற்கான அறிகுறிகள் அந்த படத்தில் தெரிந்தது.விக்ரம் அவர்களுக்கு ஒரு பாலா கிடைத்த மாதிரி இவருக்கு யாராவது கிடைத்தால் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு வருவார்.

நடிப்பு என்பது பொய்,அந்த பொய்யை ஒரு மூன்று மணி நேரம் உண்மையென நம்பவைப்பவன் சிறந்த நடிகன்,அந்த வகையில் மேற்சொன்னவர்கள்
மிகச் சிறந்த நடிகர்கள்,இவர்களை போன்று திறமை படைத்த இன்னும் சில நடிகர்களும் இருக்கிறார்கள்.நம் இயக்குனர்க
ள் இவர்களையும் கொஞ்சம் கண்டுகொண்டால் நன்றாக இருக்கும்.


கொசுறு: "சாமி" படத்தில் கோட்டா சீனிவாசராவ் நடித்த கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷை நடிக்க வைக்க முடியுமா? என்பது போன்ற பின்னூட்டங்கள் தவிர்க்க படுகிறது. :)

Friday, December 12, 2008

மினிபஸ் பயணமும் ராமராஜன் பாடல்களும்:


எப்போதாவது கிராமப்புறங்களில் செல்லும் மினிபஸ்ஸில் பயணித்திருக்கின்றீர்களா?இல்லையெனில் ஒருமுறை சென்று பாருங்கள், நல்லதொரு சிறுகதை தொகுப்பை படிக்கும் உணர்வை தரவல்லது இந்த மினிபஸ் பயணம்,அத்தனை சுவாரஸ்யங்களும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்தது.

பஸ் வசதியில்லா கிராமங்களிலிருந்து அருகில் உள்ள பேரூராட்சி அல்லது நகராட்சி அந்தஸ்துள்ள ஊர்களுக்கு விடப்பட்டிருக்கும் இந்த மினிபஸ்களின் சேவை மகத்தானது.

கிராமப்புறங்களில் புழக்கத்திலுள்ள பதினெட்டுப் பட்டி என்ற சொல் அனேகர் அறிந்ததே, திருமணத்திற்கு பெண் கொடுப்பது,எடுப்பது என எல்லாமே பெரும்பாலும் இந்த பதினெட்டு ஊர்களுக்குள்ளாகவே நடக்கும்.குறிப்பிட்ட இந்த பட்டிகளில் ஏதோ ஒரு பட்டியில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த மினிபஸ்கள், குறைந்தது ஒரு பத்து பட்டிகளிலாவது நுழைந்து இருபது நிமிடத்தில் அடையவேண்டிய தூரத்தை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து வந்து சேரும்.இதிலென்ன சுவராஸ்யம் என்கிறீர்களா?நிறைய இருக்கிறது.

பயணிகள் வசதி நிறுத்தம்(passengers dependent bus stop), நாம் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், இறங்கிக்கொள்ளலாம். இதில் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் இருவர் ஒரே நேரத்தில் பயணித்தால் இருவரும் அவரவர் வீட்டு வாசலிலேயே இறங்கிக்கொள்ள முயல்வர், அவர்களிடம் நடத்துனர், "ஏங்க ஒரே இடத்திலே இறங்கிக்கலாம்ல" என்று சொல்லிவிட்டால் போச்சு ,"ஏன் அவன் வீட்டு வாசலில நிக்கிற வண்டி ஏவீட்டு வாசலில நிக்காதோ" என்று பெரிய கௌரவப்பிரச்சினை கிளம்பிவிடும்.

டிரைவரிடம்,"தம்பி,எம்மவகிட்ட இத மறக்காம கொடுத்துடுங்க, அவ வந்து வாங்கிக்குவா"என பக்கத்து ஊரில் கட்டிகொடுத்திருக்கும் தனது மகள் வீட்டிற்கு பால் முதல் பனியாரம் வரை பார்சல் அனுப்பும் தாய்குலங்கள், மருந்து சீட்டை கொடுத்து மாத்திரைகள் வாங்கிவரச் சொல்லும் பெருசுகள், அண்ணே அடுத்த நடை வரும்போது ரெண்டு முழம் பூ வாங்கிட்டு வந்துருங்கண்ணே என்று காசை நீட்டும் குமரிகள் இப்படியாக ஒரு இலவச கூரியர் சர்விஸ் வேலையையும் செய்து கொண்டிருக்கும் இந்த மினிபஸ்களில் நடக்கும் சுவாரஸ்யங்களின் பட்டியல் நீளும்.

சாலையில் பஸ் செல்வதை பார்த்திருப்போம்,ஆனால் இந்த மினிபஸ்கள் பல இடங்களில் சாலையென்ற ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே சென்று கொண்டிருக்கும். ஒரு சில இடங்களில் நல்ல நிலையில் சாலைகளிருக்கும், ஆனால் கண்டிப்பாக அங்கே ஒரு பெண்மணி தானியங்களை காயவைத்துக்கொண்டிருப்பார், டிரைவர் அவரிடம்,"ஏம்மா இப்படி நடுரோட்ல காயவெச்சீங்கன்னா எப்படி வண்டி ஓட்றது"என்று கேட்டால்,"ஆமா நீ ஒரு நாளைக்கு வருவ ஒம்போது நாளைக்கு ரிப்பேருன்னு வரமாட்ட,இன்னைக்கு நீ வருவேன்னு எனக்கென்ன சோசியமா தெரியும் "என்பதுதான் அந்த பெண்மணியின் பதிலாக இருக்கும். அதற்குள் பஸ்ஸினுள் இருக்கும் எதாவது ஒரு பெருசு,"தம்பி கிராமம்னா கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும்,அட்சஜ்ட் பண்ணிபோப்பா" என்று குரல் கொடுக்கும்,ஏன்னா அடுத்த திருப்பத்துல அவர்வீட்டு நெல் காய்ந்து கொண்டிருக்கும்.

சாலையின் நடுவே சில இடங்களில் கால்நடைகள் கும்பலாக படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்,அவற்றை எழுப்ப நடத்துனர் படும்பாடு இன்னும் வேடிக்கையாக இருக்கும்(அவருக்கல்ல). ஹேர்பின் பென்ட்டைவிட அபாயகரமான வளைவுகளை கடந்து நம்ம பென்ட்டை கழட்டிவிடும் இந்த மினிபஸ் பயணத்தில் இப்படி சில அசௌகர்யங்கள் இருப்பினும் நான் ஒவ்வொருமுறை ஊருக்குபோகும்போதும் இதில் பயணிப்பதை மிஸ் பண்ணுவதில்லை,அதற்கு முக்கியமான காரணமென்றால் இளயராஜாவின் பாடல்கள்தான்.

சென்ற முறை பயணத்தின்போது ராமராஜன் பாடல்களை ரொம்ப நாளைக்கு பிறகு கேட்கும் வாய்ப்பு அதுவும் வயல்வெளிகளினூடாக பஸ் வரும்போது "சொர்கமே என்றாலும்" பாடலை கேட்டபோது இதற்கு முன் பலதடவை கேட்ட பாடல்தானென்றாலும் அந்த ரம்மியமான சூழலில் அந்த பாடலின் வரிகளுக்கேற்ற காட்சிகளை நேரில் பார்த்துக்கொண்டே பயணித்தபோது அந்த பாடலின் வீச்சை முழுமையாக உணரமுடிந்தது.
தொடர்ந்து "தினமும் சிரிச்சு மயக்கி", "ராசாத்தி மனசுல","அரும்பாகி மொட்டாகி","நேத்து ஒருத்தர ஒருதர பார்த்தோம்", "மதுர மரிக்கொழுந்து வாசம்", "செண்பகமே" ஆகிய பாடல்கள் வரிசையாக ஒலித்துக்கொண்டே வந்தது. அதென்னவோ தெரியல,மோகன் மற்றும் ராமராஜன் படங்களுக்கு இளயராஜா அவர்கள் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையமைத்திருப்பதாகவே தோன்றுகிறது. இந்த மாதிரியான கிராமத்து கீதங்களை சத்தமாக ஒலிக்கவிட்டுக்கொண்டு செல்லும் மினிபஸ்கள் வாழ்க.

கொசுறு:எங்க பக்கத்து வீட்டுக்காரரும் அன்று என்னோடு பஸ்ஸில் வந்தார்,இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அவரவர் கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டோம் என்பதை இங்கே சொல்லிக்கிறேன்.
:)

Tuesday, December 2, 2008

அக்கரை பச்சை

ஐந்து வருடங்கள் அன்னிய நாட்டில் குப்பைகொட்டிவிட்டு இதோ இப்போதுதான் எனது சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன்.

புதிதாக ஓரிரு மாடி வீடுகள்,புழுதியை கிளப்பியபடி போகும் மினிபஸ் தவிர இத்தனை வருடத்தில் பெரிதாக மாற்றம் ஒன்றுமில்லை. இன்னொரு பெரிய மாற்றம் என்றால் அனேக பெண்கள் நைட்டிக்கு மாறியிருக்கிறார்கள், அதென்னவோ தெரியவில்லை நைட்டியை அணிந்துகொண்டு,மேலே துண்டு ஒன்றையும் போட்டிருக்கிறார்கள் 'காலாச்சார தடுமாற்றம்'. யோசித்தபடியே நட்ராஜின் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.

"நட்ராஜ்" என்னுடைய நண்பன்.நட்பு,நண்பன் போன்ற வார்த்தைகளை நான் கேட்டிராத காலத்திலிருந்தே அவனை எனக்கு தெரியும்.கால ஓட்டத்தில் எத்தனையோ நண்பர்கள் எனக்கு கிடைத்திருந்தாலும் நட்ராஜ் கொஞ்சம் ஸ்பெஷல்.

சிறுவயதில் தட்டாம் பூச்சி பிடித்ததிலிருந்து கல்லூரியில் பட்டாம்பூச்சிகள் பார்த்ததுவரை எங்களுக்குள் பகிர்ந்துகொள்ள ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பினும் அவனை எனக்கு மற்றவர்களிடமிருந்து வித்யாசபடுத்தி காட்டியது அவனுடைய இலக்கிய ஆர்வமும்,புரட்சி சிந்தனைகளும்தான். பத்தாம் வகுப்பு படித்தபோதே சேகுவாரா,லெனின் பற்றியெல்லாம் பேசுவான்.

கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதுகிறேன் பேர்வழியென்று "வானத்துல தெரியுது நீலம்,நீதான் எனக்கு பாலம்" மாதிரியான மொக்கைகளாக எழுதிக் கொண்டிருந்த எனக்கு வண்ணதாசன்(கல்யாண்ஜி), கலாப்பிரியா என இலக்கியவாதிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்தியதும் அவன்தான்.

விடுமுறை நாட்களில் எங்களுடைய மற்ற நண்பர்கள் பெரும்பாலும் சாவடியில் அமர்ந்து சரோஜா தேவியில் மூழ்கியோ அல்லது ஏதாவது பெண்களின் அந்தரங்க நடவடிக்கைகளை ஆராய்ந்து கொண்டோ இருக்கும் வேளைகளில்,நாங்களிருவரும் ஏரிக்கரை ஆலமரத்தின் தணிந்த கிளையில் அமர்ந்தோ அல்லது காட்டாற்று அணைக்கட்டில் அமர்ந்தோ கல்கியையோ,சாண்டில்யனையோ வாசித்துக்கொண்டு இருப்போம்.

கல்லூரி படிப்பு முடிந்து நான் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது அவனுக்கு ஊரைவிட்டு வரமனமில்லாமலும் ,அவனுக்கு பிடித்த லெக்சரர் வேலைக்கு முயற்சி செய்யும் பொருட்டும் ஊரிலேயே இருந்துவிட்டான்.

இப்படியாக அவனைப் பற்றி யோசித்தபடியே போய்கொண்டிருந்தபோதே நட்ராஜ் எதிரே வந்துகொண்டிருந்தான்.


"சரவணா,வா வா வா இப்போதான் வந்தியா?,காலையிலிருந்து உங்க வீட்லதாண்டா இருந்தேன்" முகமெங்கும் பிரகாசமாய் என்னை வரவேற்றான்.

"டேய் நல்லா குண்டடிச்சிட்ட,அமேரிக்கா கிளைமேட்டுக்கு நல்லா கலராவும் ஆயிட்டடா" என்றான்.

"அது சரி நான் அப்போதிலிருந்தே கொஞ்சம் குண்டாத்தான் இருப்பேன்,நீ என்னடா இவ்ளோ பெருசா இருக்கே" என்று கேட்டபடியே அவனை பைக்கில் ஏற்றிக்கொண்டு அணைக்கட்டு பக்கமாய் வண்டியை செலுத்தினேன்.

"சரவணா,இன்னும் எவ்ளோ நாள்டா இங்கே இருப்ப"

"இன்னும் ஒரு வாரம் இருப்பேன்டா,அடுத்தவாரம் சென்னையில் புது கம்பெனியில் ஜாய்ன் பண்ணனும்"

"அப்படியா,எனக்கும் கூட காலேஜ்ல செமெஸ்டர் லீவு முடிய இன்னும் பத்து நாள் இருக்குடா"என்று அவன் சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.இப்படியே ஆரம்பித்த எங்கள் பேச்சு கடந்த ஐந்து வருடங்களில் ஊரில் நடந்த சம்பங்கள்,அவன் வேலை பார்க்கும் கல்லூரியின் சுவையான நிகழ்ச்சிகள் என ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிறுவயதில் எங்கெல்லாம் சுற்றினோமோ அங்கெல்லாம் சுற்றி,ஏராளமான கதைகள் பேசியபடியே நான்கைந்து நாட்கள் ஓடிவிட்டது.நான் ஊருக்கு புறப்படுவதற்கு முதல்நாள் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அவனுடைய சில மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினான்.

அந்த மாணவர்கள் நட்ராஜின் மேல் வைத்திருந்த அன்பு கலந்த மரியாதை என்னை ஆச்சர்யபடுத்தியது,அவர்களிடம் பேசியபோது அவர்கள் நட்ராஜை பற்றி என்னிடம் கூறிய வார்த்தைகள் ,நான் நட்ராஜை வாடா போடா என்று கூப்பிடுவதற்கே கொஞ்சம் தயக்கமாக இருந்தது, அந்த அளவிற்கு அவன் எல்லோராலும் மதிக்கபடும் நபராய் இருக்கிறான்.

பிறகு அவர்கள் ஒரு சிறிய இலக்கிய கூட்டம்போல் நடத்தினார்கள்,நட்ராஜும் அவன் மாணவர்களும் கலந்துரையாடியதை கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.


அன்று இரவு தூங்கமுடியாமல் ஏதேதோ சிந்தனை.எதையோ மிஸ் பண்ணிட்ட மாதிரி இருந்தது,"சே,நட்ராஜ் எவ்ளோ அருமையான ஒரு வாழ்க்கை வாழறான்",நான் வாழ்றது ஒரு வாழ்க்கையா" என மனசு நிலை கொள்ளாமல் தவித்தது.

இன்னும் இரண்டு வருடத்தில் நாமும் ஊர்பக்கமாக வந்து செட்டில் ஆகிட வேண்டியதுதான்.சம்பளம் குறைவாக இருப்பினும் நிறைவான வாழ்க்கையல்லவா நட்ராஜ் வாழ்கிறான் என பலவாறு யோசித்துக்கொண்டே உறங்கிப்போனேன்.


அடுத்த நாள் ஊருக்கு வழியனுப்ப நட்ராஜ்தான் பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் வந்திருந்தான்.பஸ் வந்து கொண்டிருந்தது.

"ஹூம் நாளையிலிருந்து லாஜிக்,பக்(bug) என மீண்டும் நரக வாழ்க்கையென" மனதிற்குள் நினைத்துக் கொண்டே,

"சரி நட்ராஜ் நான் வரேன்டா,போயிட்டு போன் பன்றேன்"என்றதும்,

நட்ராஜ் என் கைகளை பிடித்துக் கொண்டு , "சரவணா ,சென்னையிலே ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுடா" நானும் வந்திடுறேன்,எவ்ளோ நாளைக்குதாண்டா குண்டுசட்டியிலேயே குதிரை ஓட்டுறது,எதாவது ஒரு சேஞ்ச் வேணும்னு தோணுதுடா"என்றவனிடம் என்ன சொல்வதென தெரியாமல் பஸ் ஏறிய என்னை புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றான் நட்ராஜ்.

கொசுறு:இந்த சிறுகதைக்கு எதாவது பொருத்தமான பெயர் சொல்லுங்க,நான் நினைத்திருக்கும் பெயரை யாராவது சொல்றீங்களான்னு பார்க்கலாம் என்று கேட்டிருந்ததை தொடர்ந்து "அக்கரைப் பச்சை"யென்று நான் நினைத்திருந்த தலைப்பையே அருணா அவர்களும் கூறியிருக்கிறார்கள்.மேலும் நண்பர்கள் முரளி கண்ணன்,வெங்கட்ராமன்,குடுகுடுப்பை,வெயிலான் மற்றும் ராஜூ ஆகியோர் சொன்ன தலைப்பில் வெங்கட்ராமன் சொல்லியிருந்த மனக்குரங்கு மற்றும் ராஜூவின் விட்டில் பூச்சிகள் ஆகிய தலைப்புகள் எனக்குப் பிடித்திருந்தது.வெயிலான் சொல்லியிருக்கும் தலைப்பிற்கு எனக்கு வேறொரு நாட் தோன்றியிருக்கிறது. கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

Friday, November 28, 2008

நொடிக் கவிதைகள்.....!



நொடிக்கவிதைகள் பகுதி 1 இங்கே:

கொசுறு:பெரிதாக ஈர்க்கும் படி இருக்காது.கொஞ்(சு)சம் தமிழில் விளையாடி பார்த்தேன்.

Wednesday, November 26, 2008

அறுவடை நாளும்,ஒருவர் வாழும் ஆலயமும் கூட சின்னத்தாயும்...!

நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி போய் பார்ப்பவரா நீங்கள், அப்படியெனில் உங்களுக்காத்தான் இந்த பதிவு.தமிழில் இதுவரை வெளியான படங்களில் மறக்க முடியாத படங்களென்றும், பார்க்க வேண்டிய படங்களென்றும் பெரும்பாலானோர் சொல்வது முள்ளும் மலரும், உதிரி பூக்கள்,மூன்றாம் பிறை,நாயகன்,16 வயதினிலே மற்றும் சில பாலச்சந்தர் திரைப்படங்கள் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த காதல், வெயில், பருத்தி வீரன் இப்படி சிலவும் இந்த பட்டியலில் உண்டு.இவைத் தவிரவும் நான் ரசித்த எல்லோரும் பார்க்க வேண்டும் என நினைக்கிற சில படங்களும் உண்டு.

அந்த வகையில் நல்ல கதையம்சம் மற்றும் வித்யாசமான திரைக்கதையில் வெளிவந்த அறுவடை நாள்,ஒருவர் வாழும் ஆலயம் மற்றும் சின்னத்தாயி படங்களை பற்றிய ஒரு பார்வை.இம்மூன்று படங்களும் மேற்சொன்ன படங்களை போல பெரிய தாக்கத்தை உண்டு பண்ணாவிட்டாலும் உங்களுக்குள் ஒரு சின்ன அதிர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

அறுவடை நாள்:

G.M.குமாரின் இயக்கத்தில் பிரபு,ராம்குமார், பல்லவி, R.P.விஸ்வம், வடிவுக்கரசி, ராசி ஆகியோரின் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் கதை புதுமையாக இல்லாவிட்டாலும்,கதைக் களம் வித்யாசமானதாய் இருக்கும்.கதை வடிவுக்கரசியின் பார்வையில் தொடங்கும், ஒரு கிராமம், அதில் ஒரு பண்ணையார்(விஸ்வம்), அவரின் வெகுளித்தனமான மகன்(பிரபு), அவ்வூர் தேவாலயதின் பாதிரியார்(ராம்குமார்),மருத்துவ சேவை செய்ய வரும் ஒரு கிறித்துவப் பெண்(பல்லவி) மற்றும் பிரபுவின் முறைப் பெண்ணான ராசி இவர்களை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கும். கன்னியாஸ்திரியாகும் எண்ணத்தோடு இருக்கும் பல்லவிக்கு, பெற்ற தந்தையாலேயே அடிமைபோல் நடத்தப்படும் பிரபு மீது இயல்பாய் பிறக்கிற இரக்கம் நாளடைவில் இருவருக்குமிடையே காதல் மலர காரணமாயிருக்கிறது . இவர்களின் காதலுக்கு பாதிரியார் ராம்குமார் துணையாக நிற்கிறார். விஷயம் பண்ணையாருக்கு தெரியவரும்போது தனது குள்ளநரித்தனத்தால் பிரபுவுக்கே தெரியாமல் மைனர் பெண்ணான ராசியை திருமணம் செய்து வைத்துவிடுகிறார். ராசியுடன் தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா,பல்லவியுடனான காதல் என்னானது என்பதையெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.இப்படத்தின் தலைப்பு இக்கதைக்கு எவ்வளவு பொறுத்தமானது என்பதை படத்தின் முடிவில் உணர்வீர்கள்.

இந்த படத்தில் என்னை கவர்ந்த விஷயம் ராம்குமாரின் கதாபாத்திரமும் மற்றும் அவர் பேசும் வசனங்களும். ராம்குமார், பல்லவி, விஸ்வம் மற்றும் ராசி ஆகியோருக்கு இது முதல் படம். ஆனால் யாருடைய நடிப்பும் இதுதான் முதல் படம் என்பதுபோல் தெரியாது. இளையராஜாவின் இசையில் "தேவனின் கோவில் மூடிய நேரம்" என்ற அற்புதமான பாடலும் உண்டு. பாடல்கள் கங்கை அமரன்,கதை லிவி ,வசனம் R.P.விஸ்வம்.

கொசுறு:இப்படத்தின் இயக்குனர் G.M.குமார் பின்னர் இப்படத்தின் கதாநாயகியான பல்லவியை மணந்து கொண்டார்.வெயில் படத்தில் பசுபதியின் தந்தையாக நடித்திருப்பதும் இவரே.

ஒருவர் வாழும் ஆலயம்:

சண்முகப் பிரியன் இயக்கத்தில்,இளையராஜாவின் இசையில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரபு, ரஹ்மான், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிவக்குமார் ஒரு இசைக்கலைஞன், தன் மனைவிமீது(அம்பிகா) அளவுக்கடந்த அன்பு வைத்திருக்கிறார், தலைபிறசவத்தில் ஒரு பெண்குழந்தையை ஈன்று மனைவி இறந்து போகிறார். மனைவியின் இறப்பிற்கு காரணமாக தனது மகள் ரோகினியை(ராது) நினைக்கும் சிவகுமார் அவரை வெறுக்கிறார், அது அவள் வளர்ந்து குமரியான பிறகும் தொடர்கிறது. இந்நிலையில் சிவக்குமாரிடம் சங்கீதம் பயில வரும் ரகுமானுக்கும், ரோகினிக்குமிடையே மெலிதாக காதல் அரும்புவது தெரிந்து அவசரமாக தனது மகளை பிரபுவிற்கு மணமுடித்து வைக்கிறார்.அதன் பிறகு ரகுமான் ஒருமுறை ரோகினியை பார்க்க நேரிடும்போது ஊர்மக்களால் அவர்களது சந்திப்பு தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பிரபுவிடம் சொல்லிவிட பிரபு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு துறத்துகிறார்.இந்த சூழ்நிலையில் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயலும் ரகுமானை அவர் யாரென்று அடையாளம் தெரியாத பிரபு காப்பாற்ற நேரிடுகிறது. பிறகு ரகுமான் யாரென்று தெரிந்து பிரபு என்ன செய்கிறார், கதாநாயகி என்ன ஆனாள் என்பதை ஆன்லைனிலோ,டி.வி.டியிலோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் திரைக்கதை, கதையின் ஒருபாதி ரகுமானின் கண்ணோட்டத்திலும்,மறுபாதி பிரபுவின் பார்வையிலும் எடுத்துச் சென்றிருப்பது வித்யாசமாய் இருந்ததால் எனக்கு பிடித்த படமாயிற்று."மலையோரம் மயிலே","நீ பௌர்ணமி" போன்ற பாடல்களும் உண்டு.

சின்னத்தாயி :

கணேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் விக்னேஷ் அறிமுகமான இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது.ஒரு கிராமத்தை கதைக்களமாக கொண்டுள்ள இத்திரைப்படத்தில் வித்யாசமான திரைக்கதையோ,பிரமாண்டமான காட்சி அமைப்புகளோ எதுவுமே இராது,ஆனால் எடுத்துக்கொண்ட கதை சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் இருந்தது. ஊரின் பூசாரியான வினுசக்கரவர்த்தி, அவரின் மகன் விக்னேஷ், அந்த ஊரின் முக்கியஸ்தர் நெப்போலியன், அவரின் கீப்பாக சபிதா ஆனந்த், சபிதா ஆனந்தின் மகளாக கதாநாயகி பத்மஜா(பொற்காலம் ராஜேஸ்வரி) இவர்களை சுற்றி கதை பிண்ணப்பட்டிருக்கும். கதைப்படி சின்னத்தாயி(பத்மஜா) மற்றும் விக்னேஷ் இருவரும் சிறுவயது முதலே விளையாடித்திரிகிறார்கள்,பருவ வயது வந்ததும் அவர்களிடத்தில் காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. இவர்களின் பழக்கம் மெல்ல சபிதா ஆனந்திற்கு தெரியவர தன் மகளை கண்டிக்கிறார். தன் நிலை தன் மகளுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கல்யாணத்திற்கு முன்னரே சின்னத்தாயி கர்ப்பமாகிறாள்,இதற்கிடையில் சபிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக நெப்போலியனின் கண் சின்னத்தாயின் மீது விழுகிறது, அவரிடத்திலிருந்து தன் மகளை காப்பாற்றும் போராட்டதில் தனது உயிரை விடுகிறார் சபிதா.ஊர் திருவிழா வருகிறது, எப்போதும் சுடலைமாடன் வேடம் தறித்து ஊரில் நடக்கும் கெட்ட விஷயங்களை அழிக்கும் வினுசக்கரவர்த்திக்கு(சுடலைமாடன் வேட்டைக்கு போகும்போது அவர் கொலை செய்தால் கூட அது சாமி செய்ததாக நம்புகிற ஊர்) பதிலாக அவர் மகன் விக்னேஷ், அந்த வருடம் சுடலைமாடனாகிறார். இதற்கிடையில் சின்னத்தாயி ஊரைவிட்டு விரட்டபடுகிறார். பிறகு சுடலைமாடன் வேடம் தறித்து வேட்டைக்கு கிளம்பும் விக்னேஷின் முன்னால் பிறசவித்த பச்சை உடம்போடு ( கதைப்படி தீட்டு உடம்போடு) வந்து விக்னேஷிடம் கேட்கும் கேள்விகளும்,அதை தொடர்ந்து வரும் சம்பவங்களும் இந்தப் படத்தை சிறந்த படமாக எனக்கு அடையாளம் காட்டியது. இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் பெரிய ஹிட்டானவை, குறிப்பாக "நான் ஏரிக்கரை மேலிருந்து","கோட்டையை விட்டு" ஆகிய பாடல்கள்.

கொசுறு:இத்திரைப்படங்களை பார்க்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அந்த படங்கள் வெளியான வருடத்தையும் அப்போதுள்ள டெக்னிக்கல் விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டுகிறேன்.

Tuesday, November 25, 2008

காணாமல் போன பின்னணி பாடகர்கள்:

புதிது புதிதாக எத்தனையோ இளமை மற்றும் திறமையான பாடகர்கள் தற்போது பாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இசை ஆர்வலர்களால் மறக்க முடியாத பாடல்களை பாடி தற்போது வாய்ப்புகள் இல்லாமலும் அல்லது முழுநேர பாடகர்களாக இல்லாமல் அவ்வப்போது ஒரு சில பாடல்களை மட்டும் பாடியிருக்கும் சில பின்னணி பாடகர்களை பற்றி ஒரு சிறிய நினைவூட்டல் இப்பதிவு.

தீபன் சக்கரவர்த்தி:
பழம்பெறும் பாடகரான திருச்சி லோகநாதனின் கலைவாரிசான இவரின் இசைத்திறமையை பறைசாற்ற நிழல்கள் படத்தில் இடம்பெற்ற "பூங்கதவே தாழ்திறவாய்" பாடல் ஒன்று போதும்.நல்ல குரல் வளம் இருந்தும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே திரையில் பாடியிருக்கிறார். தற்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரின் அண்ணன் டி.எல்.மஹாராஜனுக்கும் இதே நிலைதான்.ஆனாலும் இவர் பக்தி பாடல்கள் பாடுவதில் பிஸி.

தீபன் சக்கரவர்த்தி பாடிய சில பாடல்கள்:

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு -மெல்ல பேசுங்கள்
அரும்பாகி மொட்டாகி பூவாகி-எங்க ஊரு காவல்காரன்
தேவதை போலொரு பெண்ணிங்கு-கோபுர வாசலிலே
டி.எல்.மகாராஜன் பாடிய சில பாடல்கள்:
நீ கட்டும் சேலை மடிப்பிலே - புதிய மன்னர்கள்
பூவாட்டம் காயாட்டம் கன்னித் தோட்டம்-அரவிந்தன்
காதல் யோகி - தாளம்

எஸ்.என்.சுரேந்தர்:
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனால் நல்ல குரல் வளம் உடையவர் என்ற பாராட்டை பெற்றவர்.1980 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார்.நடிகர் மோகனுக்கு தொடர்ந்து பின்னணி பேசியவர்.நடிகர் விஜயின் தாய் மாமாவான இவர்,விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் 'பூவே பூவே பெண்பூவே' என்ற பாடலையும் ப்ரியமுடன் படத்தில் "ஒயிட் லகான் கோழி" பாடலையும் பாடியிருக்கிறார்.
இவரின் சில பாடல்கள்:

தேவன் கோவில் தீபம் ஒன்று -நான் பாடும் பாடல்
தனிமையிலே ஒரு ராகம் - சட்டம் ஒரு இருட்டறை
மாமரத்து பூவெடுத்து,கண்மணி நில்லு - ஊமை விழிகள்
பாரிஜாத பூவே - என் ராசாவின் மனசில

அருண் மொழி:
இசைஞானி இளையராஜாவிடம் புல்லாங்குழல் இசைகலைஞராக இருக்கும் அருண்மொழி ஒரு சிறந்த பின்னணி பாடகராகவும்,விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் இடம் பெற்ற 'அரும்பும் தளிரே' என்ற பாடலை எழுதி தன்னை ஒரு பாடலாசிரியராகவும் பண்முகம் காட்டியவர்.நடிகர் பார்த்திபன் படங்களுக்கு பெரும்பாலும் இவரே பாடியிருப்பார்.இளையராஜாவின் இசையில் பார்த்திபன் நடித்த "தாலாட்டு பாடவா" படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் பாடும் வாய்ப்பை பெற்றவர்.

இவரின் சில பாடல்கள்:

மேக வீதியில் நூறு வெண்ணிலா(மனோவுடன்)-வெற்றிக் கரங்கள்
வராது வந்த நாயகன்,நீதானா நீதானா -தாலாட்டு பாடவா
ஆத்துல அன்னக்கிளி - வீரா
தென்றலுக்கு தெரியுமா - பாரதி கண்ணம்மா
உன்னை காணாமல் நானேது-கவிதை பாடும் அலைகள்
மனசுக்குள்ள நாயனச் சத்தம்-மல்லு வேட்டி மைனர்
புன்னை வனப் பூங்குயிலே- செவ்வந்தி
நானென்பது நீ அல்லவோ- சூரசம்ஹாரம்
மனோ:

இவருக்கு அறிமுகமெல்லாம் தேவையில்லை,1990 களின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் என அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியவர். இப்போது இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லையெனினும் தெலுங்கில் பாடிக் கொண்டிருக்கக் கூடும். தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ரஜினிகாந்தின் முத்து மற்றும் சிவாஜி படங்களுக்கு சூப்பர் ஸ்டாருக்கு பின்னணி பேசியவரும் இவரே.
இவரின் ஒரு சில பாடல்கள்(ரொம்ப பெரிய பட்டியல் போடவேண்டும் இருப்பினும் சில):
மலையாளக் கரையோரம்,மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா -பாண்டியன்
செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்
அந்தியில வானம் - சின்னவர்
வீரபாண்டி கோட்டையிலே - திருடா திருடா
முக்காலா முக்காப்புலா-காதலன்
அழகிய லைலா- உள்ளத்தை அள்ளித்தா
தில்லானா தில்லானா- முத்து
ஓ பிரியா பிரியா- இதயத்தை திருடாதே
அதோ மேக ஊர்வலம்-ஈரமான ரோஜாவே

இவர்கள் தவிர ராசா மகன் படத்தில் இடம்பெற்ற 'காத்திருந்தேன் தனியே' பாடலை பாடிய சந்திரசேகர்(இவர் இளையராஜாவின் குழுவில் டிராக் பாடுபவர்),'தாமர பூவுக்கும் தண்ணிக்கும்' மற்றும் 'மானா மதுர குண்டு மல்லிகை' ஆகிய பாடல்கள் பாடிய பாடகர் பெயர் சரியாக நினைவில்லை ஏதோ கிருஷ்ணாவில் ஆரம்பிக்கும்(கிருஷ்ண சந்தரோ?),'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' புகழ் கிருஷ்ணராஜ்(இவர் சமீபத்தில் பருத்தி வீரனில் ஐயய்யோ பாடலை பாடியிருக்கிறார்) ஆகியோரின் குரலும் வித்யாசமாய் இருக்கும்.

கொசுறு:ரொம்ப சீனியர் பாடகர்களான எஸ்.பி.பி, கே.ஜே.ஏசுதாஸ், மலேசியா வாசுதேவன் என பெரும் சாதனையாளர்களை இந்த பட்டியலில் சேர்க்கக் கூடாது.

ஐந்து வழி மூன்று வாசல்................!

இலக்கியம் குறித்து பெரிதாக (சுத்தமாக) பரிச்சயம் இல்லாத எனக்கு,எது இலக்கியம் என்பது பற்றியும்,எந்த கட்டமைப்புக்குள் எழுதுவது இலக்கியகக் கட்டுரைகளாக பார்க்கப்படுகின்றன என்பது பற்றியும் சரியான புரிதல் இன்றுவரை இல்லை,இதற்கு சரியான வாசிப்பனுபவம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

சில படைப்புகளில் கையாளப்படும் சொற்கள் ஒரு புரியாத புதிராகவே உள்ளது,குறிப்பாக புனைவு,கயமை,பின்நவீனத்துவம்,படிமம் இப்படி,இவற்றில் சில சொற்களுக்கு பொருள் புரிவது போலவும், சமயங்களில் புரியாதமாதிரியும் இருக்கிறது.


கல்யாண்ஜி, வண்ணதாசன், பிரமிள், ஜி.நாகராஜன், அசோகமித்ரன், பிரபஞ்சன், நீல பத்மநாபன் இப்படியாக நீளும் இலக்கியவாதிகளின் பெயர்களை கேட்க நேரிடும்போது அவர்களின் படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.ஆனால் வெகு சாமாண்ய நடையில் எழுதப்படும் சில கவிதைகளையும், கட்டுரைகளையும் படிக்கும் போதே பாதி புரிவதில்லை அப்படியிருக்க இவர்களின் படைப்பு எனக்கு புரிந்துகொள்ள முடியுமா என கூடவே மற்றொரு எண்ணமும் தோன்றும்.

இலக்கியத்தைப் பற்றி அறிய ஆவலாக இருக்கும் எனக்கு யாரின் படைப்பிலிருந்து ஆரம்பித்தால் எளிதாக இருக்கும் என உங்களுக்கு தெரிந்த படைப்புகளை எனக்கு பரிந்துரை செய்வீர்களாக.

இப்போது தலைப்பிற்கு வருகிறேன்,இலக்கியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத காலத்தில் நான் வாசித்த புத்தகம்தான் "ஐந்து வழி மூன்று வாசல்" ஒரு சரித்திர நிகழ்வையும்,நிகழ்கால நிகழ்வு ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான த்ரில்லர் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி இறுதியில் இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி அற்புதமாக கதையை முடித்திருப்பார், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன். இந்த நாவலில் இடம்பெற்ற ராஜேந்திரன்,மீனாட்சி, ஜம்னாலால் ஆகிய காதாபாத்திரங்கள் படித்து பல வருடங்கள் ஆனபின்பும் இன்னும் மனதைவிட்டு அகலாதவை.

இந்த புத்தகம் படித்த ஆர்வத்தால் அடுத்து நான் படித்தது கல்கியின் "பொன்னியின் செல்வன்",வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்" மற்றும் "கி.ராஜநாராயனின் கதைகள்" என சொற்ப எண்ணிக்கையிலேயே அடக்கிவிடலாம்.

டிஸ்கி:ரொம்ப ஆர்வக் கோளாரில் இருக்கும் எனக்கு நல்ல படைப்புகளை அறிமுகப் படுத்துங்கள் என்பதற்காகவே இந்த பதிவு.

Monday, November 24, 2008

கொஞ்சம் அந்த மாதிரியான கவிதைகள்.....!

சொப்பன சங்கமம்:
பூவாச கூந்தலின் கிறக்கத்தில்
விழித்துக்கொண்ட ஆண்மை,
உச்சிமுகர்ந்து காதுமடல் வருடி,
உதிரமதிர அதரங்கள் சுவைத்து,
சில வளைவு நெளிவுகள் கடந்து
எல்லாம் முடித்(ந்)து களைத்து,
உறங்கி விழிக்கையில்,
எஞ்சியிருக்கும் கலவிச் சோம்பல்
மெல்ல விளங்கவைக்கும்
நேற்றிரவின் சொப்பன சங்கமத்தை,
அனைத்தும் புரிந்த கணத்தில்
அங்கதமாய் கைக்கொட்டிச் சிரிக்கும்
வேறுவழியில்லாத பிரம்மச்சரியம்..!

மோகம் :
வைகறை பொழுதிலே
மெல்ல வீசும் மந்த மாருதம்,
அறையில் பரவும் இளம் வெளிச்சம்,
தூரத்து ஒற்றைக் குயிலோசை,
உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்,
எழலாமென நினைத்திருப்பேன்;
வேண்டாமென வெல்லும் சோம்பல் ,
எனது நெஞ்சில் பதிந்திருக்கும்
உனது நேற்றைய கூந்தல் பூ,
பூவை எடுத்து ரசித்திருப்பேன்
எதிரே தேனீர் கோப்பையோடு
வெட்கப்பட்டு நின்றிருப்பாய்,
உன் ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும் மோகம்..!

ஒரு கணிப்பொறியாளனின் கனவு:

ஒரு விடுமுறை நாளின்
மதியநேர தூக்கத்தில்,
செண்ணிற புரவியில்
வெண்ணிற ஆடையணிந்த
தேவதையொருத்தி வந்தாள்,
மெல்ல என் கரம் பற்றி,
எங்கோ மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி அமைத்த
ஒரு மஞ்சத்தில் இருத்தினாள்,
அப்போதுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதமென்று
தாவி அணைக்க முயல்கையில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்தால்,
நண்பனின் ஜாவா சந்தேகம்,
சந்தேகம் தீர்த்து
மீண்டும் கனவை
தொடர முயற்சித்தேன்,
முடியவில்லை-
ன் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது..!
(சென்ற ஆண்டு ஆகஸ்ட் பூங்கா இதழில் தேர்வாகியிருந்த கவிதை.)
முன்னாடி ரொம்ப பெருசா இருந்த இந்த கவிதையை முடிஞ்ச மட்டும் சுருக்கிட்டேன்,சுருக்கினதே இவ்வளோ பெருசா இருக்கு :)
டிஸ்கி : இவை ஏற்கனவே எழுதிய கவிதைகள்தான்,ஒரு மீள் பார்வைக்காக.

அம்மா..................!

அம்மா
எனக்காகத் துடிக்கும்
இன்னொரு இதயம்..!


அண்ணனுக்கு பதினாறு
வயதிருக்கும்போது
என்னை அடித்தான்,
அம்மா சொன்னாள்,
"அடிக்காதே அவன் சிறுபிள்ளையென்று"
இன்றும் என்னை அடிக்க வருகிறான்
இப்போதும் சொல்கிறாள் அதே வார்த்தைகளை,
இன்று எனக்கு வயது பதினாறு...!


டிஸ்கி:இது நான் பள்ளி நாட்களில் எழுதியது...

Sunday, November 23, 2008

காணாமல் போன பின்னணி பாடகிகள்:

கொஞ்ச காலங்களுக்கு முன் பல மறக்க முடியாத பாடல்களை பாடி,இன்று வாய்ப்புகள் குறைந்தோ அல்லது இல்லாமலோ போன பின்னணி பாடகியரை பற்றிய ஒரு சிறு நினைவூட்டலே இந்த பதிவு.

ஜென்ஸி:

1980 களின் ஆரம்பத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான ஒருசில படங்களில் நிறைய அசத்தலான பாடல்களை பாடிய தேன் குரலுக்கு சொந்தக்காரர். பாடிய அனைத்துப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டானது வேறெந்த பாடகிக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு. கேரளாவில் அரசு வேலை கிடைத்ததும் அங்கேயே சென்று நிரந்தரமாக செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில் வெளியான இவரின் பேட்டியில் மீண்டும் பாடுவதற்கு ஆவலாக இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் "சரவெடி" படத்தில் பாடப்போகிறார் என்ற செய்தி வெளியாகிருக்கிறது.வந்து கலக்குங்க மேடம்.

இவர் பாடிய பாடல்கள் சில:

தெய்வீக ராகம் -உல்லாச பறவைகள்
என் வானிலே - ஜானி
என் உயிர் நீதானே-ப்ரியா
காதல் ஓவியம் பாடும் காவியம்-அலைகள் ஓய்வதில்லை
ஆயிரம் மலர்களே,இரு பறவைகள் - நிறம் மாறாத பூக்கள்.

உமா ரமணன்:
இசைப்பிரியர்கள் பலருக்கு விருப்பமான பாடலாக இருக்கும் 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடலை பாடியவர். இவர் பாடும்போது வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் அத்தனை தெளிவாக இருக்கும். ஹைபிட்ச் பாடல்களை இவர் பாடும் விதம் அருமையாக இருக்கும்.ஏனோ இவர் பெரிதாக அங்கீகரிக்கப் படவில்லை என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகர் இசையில் புதையல் படத்தில் 'பூத்திருக்கும் மனமே' பாடலை பாடினார்.இவர் கடைசியாக திருப்பாச்சி படத்தில் வரும் 'கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு' பாடலை பாடியிருக்கிறார்.

இவர் பாடிய பாடல்கள் சில:

பூங்கதவே தாழ்திறவாய் - நிழல்கள்
ஆனந்த ராகம்-பன்னீர் புஷ்பங்கள்
பொன்மானே கோபம் ஏனோ-ஒரு கைதியின் டைரி
கஸ்தூரி மானே கல்யாண தேனே-புதுமைப் பெண்
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு- மெல்ல பேசுங்கள்
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - தென்றலே என்னை தொடு
ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை
நீ பாதி நான் பாதி கண்ணா - கேளடி கண்மணி

பி.எஸ்.சசிரேகா:
மெல்லிசை மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவரின் திறமைக்கு, இளையராஜாவின் இசையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இவர் பாடிய 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' பாடல் ஒரு சோறு பதம்.ஒரு காலத்தில் இசையமைப்பாளர்கள் மனோஜ் கியான் இசையில் வெளிவந்த படங்களில் தொடர்ச்சியாக பல பாடல்களை பாடிய இவர் கடைசியாக திரையில் பாடியது கிழக்குச் சீமை படத்தில். சிறிது நாட்களுக்கு முன் எஸ்.பி.பியுடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றபோது எஸ்.பி.பி இவரிடம் இப்போ உள்ள சில பாடகிகளை ஒப்பிடும்போது உன்னோட திறமைக்கு உனக்கு இன்னும் குறைந்தது 500 பாடல்களாவது பாடும் வாய்ப்பு வந்திருக்கணும் என்றதைக் கேட்டதும் மெலிதாக சிரித்தார் இருந்தாலும் அந்த சிரிப்பில் உரிய அங்கிகாரம் கிடைக்காத வேதனையே தெரிந்தது.இன்னும் அதே குரல்வளத்தோடு பாடுகிறார்.தற்போது மேடை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருக்கிறார்.

இவரின் பாடல்கள் சில:

செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்தவா - செந்தூரப் பூவே
மாமரத்து பூவெடுத்து,ராத்திரி நேரத்து பூஜையில் - ஊமை விழிகள்
இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி - உயிருள்ளவரை உஷா
வரகு சம்பா முளைக்கலே - உழவன் மகன்

எஸ்.பி.ஷைலஜா:
எஸ்.பி.பியின் தங்கையான இவர் எண்பதுகளின் மத்தியில் இளையராஜாவின் இசையில் பல வெற்றி பாடல்களை பாடியவர். மெலடி மற்றும் குத்து இரண்டுக்குமே மிகப் பிரமாதமாக பொருந்தக் கூடிய வளமான குரலுக்குச் சொந்தக்காரர்.இவர் தனது அண்ணனோடு இணைந்து நிறைய டூயட் பாடல்களை பாடியிருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மாநகரக் காவல் படத்தில் வரும் 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர' பாடலைச் சொல்லலாம்.

இவரின் பாடல்கள் சில:

சோலைக் குயிலே - பொண்ணு ஊருக்கு புதுசு
ராசாவே உன்னத்தான் எண்ணித்தான் - தனிக்காட்டு ராஜா
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி
மாமன் மச்சான் - முரட்டுக் காளை
கட்ட வண்டி கட்ட வண்டி - சகலகலா வல்லவன்
சுனந்தா:

இந்த பதிவை பற்றிய சிந்தனைக்கு காரணமாய் இருந்தவர்.ரொம்ப பிரபலமான பாடல்களை பாடியிருந்தும் அதிகமாய் அறியப்படாத பாடகி. இவரது குரல் மெலடி பாடல்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும், குறிப்பாக தாலாட்டுப் பாடல்கள்.இவர் பாடிய பெரும்பாலான டூயட் பாடல்கள் ஜெயச்சந்திரன் அவர்களோடுதான். இளையராஜாவைத் தொடர்ந்து தேவா இசையிலும் பல தாலாட்டுப் பாடல்களை பாடியிருக்கிறார்.

இவரின் பாடல்கள் சில:

காதல் மயக்கம் - புதுமைப் பெண்
பூ முடித்து பொட்டு வைத்த - என் புருஷன்தான் எ.மட்டும்தான்.
ஆனந்தம் பொங்கிட பொங்கிட-சிறைப் பறவை
வெள்ள மனம் உள்ள மச்சான் - சின்ன வீடு
செண்பகமே செண்பகமே- எ.ஊ.பாட்டுக்காரன்
செம்மீனே செம்மீனே - செவ்வந்தி
மன்னவா மன்னவா - வால்டர் வெற்றிவேல்
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே - உழைப்பாளி


மின்மினி:

ஒரே நேரத்தில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொடர்ந்து பல படங்களுக்கு பாடல் பாடும் வாய்ப்பை பெற்றவர்.ரோஜாவில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை'க்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகி விருதைப் பெற்றவர்.ரொம்பவும் பிஸியாக இருந்த நேரத்தில் குரலில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு பேசக்கூட முடியாத நிலையில் இசைத்துறையைவிட்டு எதிர்பாராமல் விலக நேர்ந்தது சோகம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் மீண்டும் பாடும் வாய்ப்பை பெற்றார்.அந்த பாடல் படத்தில் இருக்கிறதா என தெரியவில்லை.


இவர் பாடிய சில பாடல்கள்:

லவ்வுன்னா லவ்வு - மீரா
காற்றுப் பூவை பார்த்து - ஐ லவ் இண்டியா
மெதுவா தந்தியடிச்சானே - தாலாட்டு
மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி
பச்சை கிளி பாடும் ஊரு - கருத்தம்மா
பார்க்காதே பார்க்காதே - ஜென்டில் மேன்
சித்திரை நிலவு சேலையில் வந்தது - வண்டிச் சோலை சின்ராசு
சம்போ சம்போ - புதிய முகம்


அடுத்த பதிவில் பின்னணி பாடகர்களான தீபன் சக்கரவர்த்தி, எஸ்.என்.சுரேந்தர்,மனோ(??!!) இவர்களை பற்றி பார்ப்போம்.

Saturday, November 22, 2008

காணாமல் போன இசையமைப்பாளர்கள்:

ரொம்ப நாளைக்குப் பிறகு வேதம் புதிது படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.இவ்வளவு அற்புதமான பாடல்களை தந்த இசையமைப்பாளர் தேவேந்திரன் ஏன் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியதன் விளைவு இந்த பதிவு.

"கண்ணுக்குள் நூறு நிலவா","புத்தம் புது ஓலை வரும்"(வேதம் புதிது),
"பொங்கியதே காதல் வெள்ளம்"(மண்ணுக்குள் வைரம்) போன்ற அற்புதமான மெலடிகளை தந்த தேவேந்திரன் அவர்களின் இசையில் எனக்கு தெரிந்து இறுதியாக வெளிவந்த திரைப்படம் 90 களின் ஆரம்பத்தில் வெளியான புதிய தென்றல்.இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் கூட மிக நன்றாக இருக்கும்,குறிப்பாக எஸ்.பி.பி மற்றும் சித்ரா ஆகியோர் இணைந்து பாடியிருக்கும் "தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கை வாழ்க" பாடலைச் சொல்லலாம்.

சௌந்தர்யன், நல்ல திறமையிருந்தும் ஏனோ இவரால் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.இவரது இசையமைப்பில் முதலில் வெளிவந்த திரைப்படம் சேரன் பாண்டியன்.
அந்த படத்தில் இடம்பெற்ற "சின்னத் தங்கம் ", "வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே" போன்ற அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட்டானவை.இந்த படத்தின் பாடல்களில் ஒன்றான
"காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" பாடலை எழுதியதும் இவரே.இவர் இசையமைத்த அடுத்த படம் சிந்து நதி பூ.இந்த படத்தின் பாடல்களும் கூட மிகப் பெரிய வெற்றி பெற்றவையே.இந்த படத்தில் இடம் பெற்ற
"மத்தாளம் கொட்டுதடி மனசு" இன்றும் கூட கிராமப்புறங்களில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடலாகும்.

"உன்னை தொட்ட தென்றல் இன்று என்னை தொட்டு சொன்னதொரு சேதி" என்ற அற்புதமான மெலடியோடு தலைவாசலைத் திறந்த பால பாரதி அமராவதியில் "தாஜ்மஹால் தேவையில்லை","புத்தம் புது மலரே", "உடலென்ன உயிரென்ன" என்ற எளிதில் மறக்க முடியாத பாடல்களை தந்து,"யாருப்பா இந்த இசையமைப்பாளர்" என்று இசைப்பிரியர்களின் புருவங்களை உயர்த்தவைத்து அத்தோடு காணாமல் போனவர்தான்.சமீபத்தில் ஏதோ ஒரு படத்திற்கு பிண்ணனி இசை மட்டும் அமைத்ததாக ஞாபகம்.

வி.எஸ்.நரசிம்மன்,ஒரு காலத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் இரண்டு மூன்று படங்களுக்கு தொடர்ச்சியாய் இசையமைத்தவர்.
இவர் இசையமைத்த அச்சமில்லை அச்சமில்லை படத்தில் இடம் பெற்ற "ஆவாரம் பூவு","ஓடுகிற தண்ணியிலே" ஆகிய பாடல்கள் இன்றும்கூட தொலைக்காட்சி நேயர்களால் விரும்பி கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்த பாடல்களை முதன் முதலில் கேட்டபோது இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.வி.எஸ்.நரசிம்மன் அவர்களின் இசையில் சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தில் இடம்பெற்ற
" செண்பகப் பூவைப் பார்த்து" பாடலும் அவரது இசைத்திறமையை எடுத்துக் காட்டிய ஹிட் பாடலே.

லவ் டுடே மூலம் "என்ன அழகு எத்தனை அழகு","ஏன் பெண்ணென்று பிறந்தாய்" என்று அசத்தலான பாடல்களோடு அறிமுகமாகி,"மலரே ஒரு வார்த்தை பேசு","சின்ன வெண்ணிலவே" என்று பூமகள் ஊர்வலத்திற்காக இசைவிருந்து படைத்த ஷிவா, சக்தி ("அச்சு வெல்லமே அச்சு வெல்லமே"), அரிச்சந்திரா("முந்தானச்சேலை முட்டுதா ஆளை") படங்களுக்கு இசையமைத்த ஆகோஷ்(ஆனந்த்,கோபால் சர்மா,ஷ்யாம்), வி.ஐ.பி மூலம் அறிமுகமாகி "மின்னல் ஒரு கோடி" பாடலைத் தந்த ரஞ்சித் பரோட்(உற்சாகம் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்).கௌரி மனோகரியில் "அருவிகூட ஜதி இல்லாமல் ஸ்வரங்கள் பாடுது" என்ற மிக அருமையான பாடலைத் தந்த இனியவன் போன்ற இசையமைப்பாளர்கள் அறிமுகமான படங்களிலே எல்லோரது கவனத்தையும் கவர்ந்து,பிறகு ஒரு சிலருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமலும்,சிலருக்கு வாய்ப்பு கிடைத்தும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமலும் காணாமல் போயிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர இன்னும் இரண்டு இசையமைப்பாளர்களின் கதை சற்று வித்யாசமாய் இருக்கும்.இவர்களை காணாமல் போனவர்கள் லிஸ்டிலும் சேர்க்க முடியாது, பிசியானவர்களின் வரிசையிலும் சேர்க்க முடியாது. திடீரென காணாமல் போவார்கள்,திடீரென நான்கைந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பார்கள்.ஒருவர் "ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்"(மனசுக்குள் மத்தாப்பு),"சின்னப் பூவே மெல்ல பேசு" (சின்னப் பூவே மெல்ல பேசு) என்று ஆரம்பத்தில் அசத்தலான பாடல்களை தந்து பிறகு விக்ரமன் படத்தில் ஒரே டியூனை வைத்து ஏகப்பட்ட படங்களுக்கு "லாலாலாஆஆஆஆஆஆஆஆ" போட்ட எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றொருவர் அன்னை வயல் மூலம் "மல்லிகை பூவழகில்" என்று நல்ல பாடலோடு ஆரம்பித்து "செவ்வந்தி பூவெடுத்தேன்" என்று கோகுலத்தில் தனது திறமையை நிறுபித்து,உள்ளத்தை அள்ளித்தா என்று மிகப் பெரிய ஹிட்டெல்லாம் கொடுத்து பிறகு சில காப்பி&பேஸ்டெல்லாம் போட்டுவிட்டு இப்போது தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டி நடுவராக இருக்கும் சிற்பி.

இந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் இசையமைப்பாளர்கள் அறிமுகமான காலத்தில் இளையராஜா என்ற மிகப்பெரிய இசை சாம்ராஜ்யத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமலும் அல்லது தனக்கான தனி இசை அடையாளம் இலாமல் இளைராஜாவின் இசைப்பாணியை அப்படியே தொடர முயன்றதாலும்கூட அவர்களால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் போயிருக்கலாம்.முன்னவர்களுக்கு இசைஞானி என்றால் பின்னவர்களுக்கு இசைப்புயல்.

"ஏதோ நடக்கிறது","தோடிராகம் பாடவா","மல்லிகைப் பூ பூத்திருக்கு" போன்ற அழகான மெலடிகளையும், ரஜினி படங்கள்(மனிதன்,ராஜா சின்ன ரோஜா) உட்பட சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் பல படங்களுக்கு இசையமைத்த திரு.சந்திரபோஸ்,பாலைவனச் சோலை("மேகமே மேகமே"), பெண்மணி அவள் கண்மணி("மூங்கிலிலை காடுகளே"), சம்சாரம் அது மின்சாரம்("சம்சாரம் அது மின்சாரம்","ஜானகி தேவி") என்று எண்பதுகளின் மத்தியில் நிறைய படங்களுக்கு இசையமைத்த சங்கர் கணேஷ் மற்றும் செந்தூரப் பூவே,ஊமை விழிகள்,உரிமை கீதம்(மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்),வெளிச்சம்("துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே") போன்ற வசீகரிக்கும் பாடல்களைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்த மனோஜ் கியான் போன்ற ஒரு காலக்கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த இவர்களும் கூட காணாமல் போன லிஸ்ட்டில் இடம்பிடித்தது ஏனோ தெரியவில்லை.

அழகன்,வானமே எல்லை,ஜாதி மல்லி போன்ற படங்களுக்கு இசையமைத்த மரகதமணி(கீரவாணி),கொடிபறக்குது,கேப்டன் மகள் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹம்சலேகா, ரசிகன் ஒரு ரசிகை படத்திற்கு இசையமைத்த அமரர் ரவீந்திரன் மற்றும் பூவுக்குள் பூகம்பம்("அன்பே ஒரு ஆசை கீதம்") படத்திற்கு இசையமைத்த சங்கீத ராஜன் ஆகியோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது,காரணம் அவர்கள் தெலுங்கு மற்றும் மளையாளத்தின் முண்ணனி இசையமைப்பாளர்கள்.தமிழுக்கு அவ்வப்போது விருந்தாளிகளாய் வந்த இசையமைத்தவர்கள்.

கங்கை அமரன்,எஸ்.பி.பி மற்றும் டீ.ராஜேந்தர் ஆகியோர் இசையமைப்பதை முதன்மையான தொழிலாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

டிஸ்கி:உங்களுக்கு தெரிந்த காணாமல் போன இசையமைப்பாளர்களை பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க.
(அப்பாடா எவ்ளோ பெரிய பதிவு...)

Friday, November 21, 2008

காதல் சொன்ன கணங்கள்...2

எங்கள் வீட்டிற்கு
வழக்கமாய் வந்துபோகும் நீ,
இப்போது வரும்போதெல்லாம்,
யாரும் கேளாமலே
எதையாவது காரணம்
சொல்ல ஆரம்பித்தபோதும்..,

"சிறுவயதிலிருந்தே
ஒன்றாகவேதானே
சுற்றித் திரிவோம்.
இப்போது மட்டும்
ஏன் எல்லோரும் நம்மை
ஒரு மாதிரி பார்க்கிறாங்க?"என்று
இயல்பாய் பார்ப்பவர்கள் மீது
நீ சந்தேகபட்டபோதும்..,

"உங்க அண்ணன் படிக்கிற காலேஜ்ல
பொண்ணுங்களும் படிக்கிறாங்களா?"
என்று என் தங்கையிடம்
நீ கேட்டபோதும்.,

வழக்கம்போல்
சிறுபிள்ளைகளோடு
விளையாடிக் கொண்டிருக்கையில்,
எதிர்பட்ட என்னை பார்த்தததும்
முதன் முதலாய் வெட்கப்பட்டு
வீட்டுக்குள் ஓடிய போதும்..,

என் தங்கையிடம்,
நான் சொன்ன அறிவுரைகளை
அவள் கேட்டாளோ இல்லையோ
அனால் நீ அதன்படி
நடந்து கொண்டபோதும்..,
அறிந்து கொண்டேன்

என்மீதான உன் காதலை...!

Thursday, November 20, 2008

அவியல்-1

சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தபொழுது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி.சுமார் 25 லிருந்து 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் பட்டாளமும் அவர்களுடன் சில பெருசுகளும் நான் அமர்ந்திருந்த பகுதியில் அமர்ந்திருந்தனர்."ஏ மச்சான்,மாப்ள" என்று ஒருவருக்கொருவர் ஏக சத்தமாய் பேசிக்கொண்டே வந்தனர்.அவர்களின் பேச்சிலிருந்து நான் கவனித்தவரை அவர்கள் அனைவரும் குருவிகள்.அதில் ஒரு இளைஞர் பணிப்பெண் ஒருவரிடம் எதாவது சாப்பிட இருந்தா கொடுங்க என்று கேட்டார்,அந்த பெண்ணுக்கு புரியாமல் தமிழ் பேசும் மற்றொரு பணிப்பெண்ணை அவரிடத்தில் அனுப்பிவைத்தார்,அந்த பெண்ணும் இவரிடம் ஆங்கிலத்திலேயே கேட்க,நம்ம ஆளு அருகில் அமர்ந்திருந்த அவரின் நண்பரிடம் ,"மாப்ள, பசிக்குதுடா எதாவது இந்த புள்ளைக்கிட்ட கேளுடா ,என்னா பேசுதுன்னே புரியல" என்றதும் ,அந்த பணிப்பெண் சுதாரித்துக்கொண்டு அவரிடம் ,"உங்களுக்கு என்ன சார் வேண்டும்" என்று தமிழில் கேட்டதும், பார்ட்டி ஜெர்க்காகி அசடு வழிஞ்சிகிட்டே,"இத முன்னாடியே கேட்டிருக்கலாமே"என்று தனக்கு வேண்டியதை கூறிவிட்டு அந்த பெண் சென்றதும் "நல்லா கிளப்புறாளுங்கடா பீதிய" என்று வடிவேல் பாணியில் கூற ,அருகில் அமர்ந்திருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

****************************************

90களில் வந்த சில திரைப்பட பாடல்களின் வீடியோவை youtube தளத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.என்னுடைய அறை நணபர்,எப்போதுமே பழைய பாட்டையே கேட்டுகிட்டு இருக்கீங்க,ஏன் புது பாட்டெல்லாம் புடிக்காதா என்று கேட்டார்.அவருக்கு ஒரு சின்ன புன்னகையை மட்டும்தான் பதிலாக தரமுடிந்தது.அது என்னவோ தெரியலீங்க இப்போ வரும் பாட்டுகளிள் தொழில்நுட்ப ரீதியாய் எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் என்னுடைய பதின்ம வயதில் வெளிவந்த திரைப்பாடல்களை கேட்பதில் ஒரு அலாதி சுகம்,அந்த பாட்டுகளை கேட்கும் பொழுது அந்த பாடலை முதன் முதலாக கேட்டது தொடங்கி அப்போது நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் மனத்திரையில் ஓட ஆரம்பித்துவிடும்.ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.
(வயசாயிட்டு இருக்குள்ள.....)
****************************************

எனது நட்பு வட்டத்தில் ஒவ்வொருத்தராய் திருமண பந்தத்தில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடன் 12-ம் வகுப்பு படித்த நண்பர் ஒருவரின் திருமணம் சென்ற வாரம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது.கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைத்திருக்கிறது,ஆனால் பள்ளி நண்பர்களை ஒரு சிலரைத்தவிர பலரை நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு சந்திக்கும் வாய்ப்பு அமையவேயில்லை.பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிறைய நண்பர்களை நண்பரின் திருமணத்தில் சந்தித்தது அருமையான தருணம்.நிறைய பேருக்கு ஒருவரை ஒருவர் அடையாளமே தெரியவில்லை.நண்பர்களில் சிலர் புதுமணத்தம்பதியராயும்,சிலர் குழந்தையோடு தொந்தியும் தொப்பையுமாக வந்திருக்க சில நன்பர்கள் இன்னும் கல்லூரி மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் அதே 12ம் வகுப்பு தோற்றத்திலேயே இருந்தது ஆச்சர்யம்.அனைவரும் ஒருவருக்கொருவர் கைபேசி எண்ணையும்,மின்னஞ்சல் முகவரியும் பரிமாறிக்கொண்டு ஆனந்த சோகத்தோடு பிரிந்தது நெகிழ்ச்சியான தருணம்.
****************************************

சமீபத்தில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு திரைப்படங்கள் காணும் வாய்ப்பு அமைந்தது.முதல் படம் காதலில் விழுந்தேன், நாக்க முக்க புகழால் பார்க்க போனேன். பாட்டெல்லாம் நல்லா இருக்கு அதுவும் தோழியா என் காதலியா மற்றும் உன் தலைமுடி இரண்டு பாடல்களும் நல்ல மெலடிகள்.படம் பார்த்துவிட்டு குணா,காதலில் விழுந்தேன் மாதிரியே இருந்ததை பார்த்து செம்ம கடுப்பா வந்தது.அடுத்தது சக்கரக்கட்டி, இதுவும் டாக்ஸி டாக்ஸி பாடலால் கவர்ந்திழுக்கப்பட்டு போனதுதான்.இந்த படத்தை பற்றி என்ன சொல்றது,நிழலின் அருமை வெயில் தெரியிற மாதிரி முதல் நாள் பார்த்த காதலில் விழுந்தேனோட அருமை இந்த படத்தை பார்த்தபோதுதான் தெரிந்தது.

****************************************

நண்பர் ஒருவர் ,வீடு மற்றும் கடைகளுக்கு மார்பிள்ஸ்,டைல்ஸ் ஒட்டித்தரும் வியாபாரம் செய்து வருகிறார்.அவரிடத்தில் வேலைக்கு இருக்கும் நண்பர்கள் செய்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.சில நாட்களுக்கு முன்பு ஒருவரின் வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டுவதற்காக வேலையாட்களிடம் முகவரி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.வேலையாட்களும் சரியான விலாசத்திற்கு சென்று வீட்டு உரிமையாளரிடம் எங்கு டைல்ஸ் ஒட்ட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்கு வீட்டு உரிமையாளர்,இப்படியே நேரா போயி பார்த்தீங்கன்னா கோணி(சாக்கு) இருக்கிற அறை தெரியும் அதில் முதலில் ஒட்டுங்கள் என்றுகூறி வெளியில் சென்று விட்டாராம்.பிறகு எனது நண்பர் வேலை எப்படி நடக்கிறது என்பதை பார்ப்பதற்கு அங்கே சென்று பார்க்கும் பொழுது வேலையாட்கள் எல்லொரும் ஒரு இடத்தில் வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.என்னடா என்னாச்சு ஏன் வேலை செய்யாம இப்படி உட்கார்ந்திருக்கீங்க? என்று கேட்டதற்கு,"அட போங்கண்ணே அந்த ஆளு(வீட்டு உரிமையாளர்) கோணி இருக்கிற அறையில் முதலில் ஒட்டச் சொன்னார்.நாங்களும் எல்லா அறையையும் பார்த்துட்டோம் எல்லாமே நேராத்தான் இருக்கு ஒரு அறையும் கோணி(கோணலாக) இல்ல?" என்று சொல்லியிருக்கின்றனர்.இவனுங்கள வச்சுகிட்டு நான் என்னத்த செய்யுறதுன்னு புலம்பினார்.எனக்கு சிரிப்புதான் வந்தது.

Monday, November 17, 2008

என்னை மௌனமாக்கியவள் நீ..!

தன் பிம்பம்
தானென அறியாது,
கண்ணாடியை கொத்தும்
அடைக்கலங் குருவியாய்
உன் பிம்பம்
நானென அறியாது,
என்மேல் கோபப் படுகிறாய்..!


பாலில் கலந்த நீரை
பிரித்தறிந்த அன்னத்திடம்,
காதலில் கலந்த நம்மை
எது நீ,எது நானென
பிரித்தறிய சொல் பார்ப்போம்...!

என்னுள் எங்கோ
புதைந்திருந்த காதலுணர்வின்
மௌனத்தை கலைத்து ,
என்னை மௌனமாக்கியவள் நீ..!

மாறாத உண்மைகள் சில கூறு?
வேகமாய் சொல்கிறாய்,
"சூரியன் உதிப்பது கிழக்கு",
"வானின் நிறம் நீலம்",
"தேனின் சுவை இனிப்பு",
இப்படியாக
நீண்ட உன் பட்டியலில்,
நம் காதலும்
சேரும் என்பது
உனக்கேன் தோன்றவில்லை...!

Tuesday, September 16, 2008

உன் தாவணியின் முதல்நாளில்......!

பார்வை படும்
இடத்தில் வளரும்
ஒரு செடியின் அழகு
முதல் பூவைத்
தாங்கும் பொழுது
தெரிவதுபோல ,
பார்த்துப் பழகிய நீ
அழகியானாய்
உன் தாவணியின் முதல்நாளில்......!

இலக்கியத்தில் மட்டுமே
வாழ்ந்து கொண்டிருக்கும்,
அன்னத்திற்கும்,அன்றிலுக்கும்
அவற்றின் இயல்புகளை வைத்து
உருவம் கொடுக்க நினைத்தால் ;
உன் உருவத்திற்கு
இறக்கை முளைக்கிறது.....!

Tuesday, July 29, 2008

காதலைச் சொன்ன கணங்கள்........................!

பின்தொடர்கிறேன்
எனத் தெரிந்ததும்,
அனிச்சையாய் குறையும்
உன் நடையின் வேகத்திலும்.....

எதிர்பாரா
என் வருகையால்,
தடுமாறும்
உன் உரையாடலிலும்....

உன் வீட்டை கடக்கையில்
இல்லாத யாரையாவது
உறக்க விளித்து,
உன் இருத்தலை
அறியத் தரும்போதும்...

என் பெயரைக் கொண்ட
ஜவுளிக் கடையின் பையில்
நீ புத்தகம் சுமந்து வரும்போதும்....

உன் பிறந்த நாளில்,
உன் கையாலேயே
எல்லோருக்கும் இனிப்பு வழங்கி,
எனக்கு மட்டும்
தோழியிடம் கொடுத்து ...
வேண்டுமென்றே
என்னைத் தவிர்த்த போதும்...

அறிந்து கொண்டேன்
என் மீதான உன் காதலை..!